வெளியிடப்பட்ட நேரம்: 02:45 (28/11/2017)

கடைசி தொடர்பு:09:06 (28/11/2017)

தூத்துக்குடி புன்னக்காயல் கடற்கரையில் உயிருடன் கரை ஒதுங்கிய டால்ஃபின்கள்!

தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் கடற்கரையில், 20-க்கும் மேற்பட்ட டால்ஃபின்கள் உயிருடன் கரை ஒதுங்கின. அவற்றை மீண்டும் கடலுக்குள் விடும் முயற்சியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். 

Dolphins secluded alive in the Punkakkayal beach

 

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகில் உள்ளது புன்னக்காயல் கிராமம். இக்கிராமத்தை ஒட்டியுள்ள கடற்கரையில், 20-க்கும் மேற்பட்ட டால்ஃபின்கள் உயிருடன் கரை ஒதுங்கின. இதைப் பார்த்த மீனவர்கள், வள்ளம் எனப்படும் சிறிய மரத்தினாலான படகுகளில் டால்ஃபின்களைத் தூக்கி கடலுக்குள் விட்டுவந்தனர். ஒரு மணி நேரத்திலேயே அதில் 4 டால்பின்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கின.

இதுகுறித்து அப்பகுதி மீனவர்களிடம் பேசினோம், ‘’மாலை  ஐந்தரை மணியிருக்கும், கரையில் மீன் வலைகளை அடுக்கிவைத்துக் கொண்டிருந்தோம். அந்த நேரத்தில் சுமார் 25 டால்ஃபின்கள் உயிரோடு கரை ஒதுங்கின. கடலுக்குள் தூக்கி வீசியும் மீண்டும் கரைக்கு வந்தன. அருகில் இருந்த மீனவர்கள், அவர்களின் வள்ளத்தில் டால்ஃபின்களைத் தூக்கிப்போட்டு, சுமார் 500 மீட்டர் தூரத்துக்கு கடலுக்குள்  கொண்டுபோய் விட்டோம். ஆனால், ஒரு மணி நேரத்துக்குள் 4 டால்ஃபின்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கின. கரை ஒதுங்கிய டால்ஃபின்கள், 5 அடி முதல் 7 அடி நீளம் வரை இருந்தன. இன்னும் எத்தனை டால்ஃபின்கள் கரை ஒதுங்கப்போகிறதோ! ’’ என்றனர்.

கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் 13-ம் தேதி முதல், தொடர்ந்து 4 நாள்கள் வரை மணப்பாடு, குலசேகரன்பட்டினம், கல்லாமொழி ஆகிய கடற்கரைப் பகுதிகளில்  90-க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. அவற்றில் 53 திமிங்கலங்கள்  கயிற்றில் கட்டி படகில் இழுத்துச்சென்று ஆழ்கடலில் விடப்பட்டன. இறந்தநிலையில் கரை ஒதுங்கிய மீதமுள்ள சுமார் 40-க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் கடற்கரைப் பகுதியிலேயே புதைக்கப்பட்டன.  அவை ஒவ்வொன்றும் 1 முதல் 3 டன் வரை எடையும், சுமார் 2 முதல் 3 மீட்டர் நீளமும் கொண்டவையாக இருந்தன.

புன்னக்காயல் கடற்கரைப் பகுதியில் டால்ஃபின்கள் உயிருடன் கரை ஒதுங்கியதும், கடலுக்குள் விடப்பட்டும் அவற்றில் சில இறந்த நிலையில் கரை ஒதுங்கிய சம்பவமும் மீனவர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மீன்வளக் கல்லூரிப் பேராசிரியர்கள் இதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டுவருகின்றனர்.     

நீங்க எப்படி பீல் பண்றீங்க