பாம்பன் பால தடுப்புச் சுவரில் மோதிய அரசுப் பேருந்து!

 வட மாநில பக்தர்களை ஏற்றிவந்த அரசுப் பேருந்து ஒன்று பாம்பன் பாலம்மீது உள்ள வேகத்தடையை வேகமாக கடந்ததால் பிரேக் அறுந்து பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது.

ராமேஸ்வரம் தீவை நாட்டின் நிலப்பரப்புடன் இணைக்கும் பாம்பன் பாலம் சமீப காலமாக பல்வேறு விபத்துகளை சந்தித்துவருகிறது. பாலத்தின் உறுதித் தன்மைக்காக போடப்பட்ட ரப்பர் சாலையினால் நூற்றுக்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்த நிலையில், இதுதொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. பாலத்தில் ஏற்படும் விபத்தை தடுக்கும் வகையில், கூடுதல் நடவடிக்கைகள் எடுக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டதைத் தொடர்ந்து பாலத்தின்  பிரதான பகுதியில் போடப்பட்டிருந்த ரப்பர் சாலை அகற்றப்பட்டதுடன் பாலத்தின் இரு புறங்களிலும் வேகத் தடை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் விபத்துகளின் எண்ணிக்கை குறைந்தாலும் முற்றிலுமாக நின்றபாடில்லை.

பிரேக் கட் ஆனதால் பாம்பன்பாலம் தடுப்பு சுவர் மீது மோதிய பேரூந்து

பகல் பொழுதில் கண்ணுக்குத் தெரியும் வகையில் உள்ள இந்த வேகத்தடை, இரவு நேரங்களில் வாகனங்களின் முகப்பு விளக்குகளால் முழுமையாக தெரிவதில்லை. இதனால் புதிதாக இந்த வழித்தடத்தில் வரும் வாகன ஓட்டிகளால் அவ்வப்போது விபத்து ஏற்பட்டு வருகிறது. இன்று மாலை அரசுப் போக்குவரத்துக் கழகம் மதுரை கோட்டத்தைச் சேர்ந்த பேருந்து ஒன்றில் வட மாநில பக்தர்கள் ஒப்பந்த அடிப்படையில் மதுரையில் இருந்து ராமேஸ்வரத்துக்குப் புறப்பட்டனர். இந்தப் பேருந்தை ஓட்டியவர் மதுரையைச் சேர்ந்தவர் என்பதால்  வேகத் தடை இருப்பதை அவர் அறியவில்லை. வேகமாக வந்த பேருந்து வேகத்தடை அருகே வந்ததும்  அதைக் கவனித்த டிரைவர் வேகமாகப் பிரேக்கை மிதித்துள்ளார். இதில் பிரேக் இணைப்பு அறுந்து, பேருந்து பாலத்தின் ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் இடித்ததுடன் தடுப்பு சுவரில் மோதி நின்றது. 
பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதியபடி பேருந்து நின்றுவிட்டதால் அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை. இதுகுறித்து பாம்பன் போலீஸார்  விசாரணை நடத்திவருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!