ராமேஸ்வரத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மாவீரர் தின அஞ்சலி நிகழ்ச்சி! | Rameswaram-Velmurugan Participated a Function

வெளியிடப்பட்ட நேரம்: 04:15 (28/11/2017)

கடைசி தொடர்பு:17:32 (23/07/2018)

ராமேஸ்வரத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மாவீரர் தின அஞ்சலி நிகழ்ச்சி!

ராமேஸ்வரத்தில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மாவீரர் தின நினைவு அஞ்சலிக் கூட்டம் அதன் தலைவர் வேல்முருகன் தலைமையில் நடந்தது.

தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் மாவீரர் தின அஞ்சலி கூட்டம்


ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே நடந்த இந்த அஞ்சலிக் கூட்டத்தில், தனிநாடு கோரி இலங்கை ராணுவத்துடன் போரிட்டு உயிர் துறந்த வீரர்களின் உருவப்படங்களுக்கு மெழுகுவத்தி ஏற்றி பூக்களால் அஞ்சலிசெலுத்தினார் வேல்முருகன். அதைத்தொடர்ந்து அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள், தங்கள் கைகளில் மெழுகுவத்தி ஏந்தி அஞ்சலிசெலுத்தினர். இதைத் தொடர்ந்து நடந்த அஞ்சலிக் கூட்டத்தில் உரையாற்றிய வேல்முருகன், ''விடுதலைப்புலிகளின் தலைவர் போர் வீரன்  பிரபாகரன் இன்னும் எங்கள் உள்ளத்திலும் உயிரிலும், ரத்தத்திலும் வாழ்கின்றார், அவர்களின் வழியில் நாங்கள் பின்தொடர்ந்து செல்கின்றோம். தனிநாடு வேண்டி தியாகம்செய்த போராளிகளின் போராட்டக் களத்தை இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டவே இந்த அஞ்சலி நிகழ்ச்சியை நடத்துகிறோம். இலங்கையில் தனித்தமிழீழ அரசு அமைய வேண்டும். அதற்கு, பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியது. அந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த நாங்கள்  ஜனநாயகரீதியில் போராட்டம் நடத்துவோம்.
 
 தமிழர்களை ஒடுக்கும் நோக்கில்தான் மத்திய அரசு செயல்பட்டுவருகிறது, நீட் மற்றும் மத்திய அரசு அலுவலகங்களில் தமிழர்கள் அல்லாத வடமாநிலத்தவர்களுக்குதான் அதிக வேலைவாய்ப்பு உருவாக்கிக் கொடுக்கிறது மத்திய அரசு. கல்வி, வேலைவாய்ப்பு, ஆற்று நீர், மீன்பிடி போன்ற தமிழகத்தின் அனைத்து உரிமைகளையும் கொஞ்சம் கொஞ்சமாகப் பறித்து, நம்மை அடிமை இனமாக அடக்க நினைக்கிறது. அதை மீட்க நாங்கள் ஜனநாயகரீதியில் போராட்டம் நடத்துவோம். பி.ஜே.பி-யின் அடக்கி ஆள நினைக்கும் கனவு தவிடு பொடியாகும்'' என்றார். மாவீரர் தின கூட்டத்துக்கான ஏற்பாடுகளை தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் முருகானந்தம், செரோன்குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.


[X] Close

[X] Close