''மதுசூதனன் - டி.டி.வி.தினகரன் மீண்டும் போட்டியிடுவார்களா..?' ஆர்.கே.நகர் தேர்தல் களம் சூடுபிடிக்கிறது

மதுசூதனன், டி.டி.வி.தினகரன் ஆகியோர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று அவர்களது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். தி.மு.க தரப்பில் மருதுகணேஷ் நிற்பதால் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கத்தொடங்கி இருக்கிறது.

மதுசூதனன் டி.டி.வி.தினகரன் மருதுகணேஷ் ஜெ.தீபா

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21-ம் தேதி நடைபெறுகிறது. அதைமுன்னிட்டு, தி.மு.க தனது வேட்பாளராக மருதுகணேஷ் போட்டியிடுவார் என்று அறிவித்து, தேர்தல் வேலையைத் தொடங்கிவிட்டது. இந்நிலையில், சென்னை ராயப்பேட்டை  அ.தி.மு.க  தலைமைக் கழகத்தில் நேற்று நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் கட்சியின் ஆட்சிமன்றக்குழு மாற்றி அமைக்கப்பட்டது. வேட்பாளரை தேர்வு செய்யும் அதிகாரம் கொண்டுள்ள ஆட்சிமன்றக் குழு,  வேட்பாளர் தேர்வுகுறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. கடந்த தடவை ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் நிறுத்தப்பட்ட மதுசூதனன் மீண்டும் போட்டியிடுவார் என்று ராயப்பேட்டை தலைமைக் கழக வட்டாரங்கள் தெரிவித்தன. இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை வெளியாகிறது.

இதற்கிடையில், டி.டி.வி.தினகரன் நேற்று திருச்சியில் முகாமிட்டு இருந்தார். அங்குள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் காலை நடந்த கூட்டத்தில், தலைமைக்கழக பேச்சாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. தங்க தமிழ்செலவன், நாஞ்சில் சம்பத், சி.ஆர்.சரஸ்வதி, புகழேந்தி உள்ளிட்டோர் ஆலோசனை வழங்கினர். ஆர்.கே.நகர் தேர்தல் முடிந்த பிறகு, தலைமைக் கழக பேச்சாளர்களுக்கு மூன்று நாள் சிறப்பு பயிற்சி முகாம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் அதன்பின், டி.டி.வி.தினகரன் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கடைசியாக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இந்த கூட்டங்கள் முடிவில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அறிவிக்கவில்லை. டிசம்பர் 1-ம் தேதி வேட்பாளர் பெயர் அறிவிக்க இருப்பதாக டி.டி.வி.தினகரன் கூட்டத்தில் கலந்துகொண்ட சிலர் தெரிவித்தனர். டி.டி.வி.தினகரன் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் கூறினார்கள். அதற்கு முன்னதாக, பெங்களூரு சென்று ஜெயிலில் இருக்கும் சசிகலாவைப் பார்க்க டி.டி.வி.தினகரன் திட்டமிட்டுள்ளார். ஜெ.தீபாவும் தனது போட்டிகுறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். விரைவில் அதற்கான அறிவிப்பை வெளியிட இருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!