வெளியிடப்பட்ட நேரம்: 05:15 (28/11/2017)

கடைசி தொடர்பு:14:49 (09/07/2018)

இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட 8 கிலோ தங்கம் பறிமுதல்!

தொண்டி அருகே, இலங்கையிலிருந்து கடத்திவரப்பட்ட 8 கிலோ தங்கம், மத்திய வருவாய் சுங்கப் பிரிவு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.

இலங்கையில் இருந்து கடத்தி வரப்படும் தங்கம்

இலங்கையிலிருந்து கடல் வழியாகவும், விமானப் பயணிகள் மூலமாகவும் தங்கத்தைக் கடத்திவருவது  நாள்தோறும் நடந்து வருகின்றன. கடந்த ஒரு வாரத்துக்கு முன், மண்டபம் கடற்கரையில் மீனவர் ஒருவர் கடத்திவந்த சுமார் 6.856 கிலோ தங்கத்தை க்யூ பிரிவு போலீஸார்  கைப்பற்றினர். அதேபோல, கடந்த இரண்டு நாள்களுக்கு முன் கொழும்பிலிருந்து சென்னைக்கு விமானத்தில் செல்ல முயன்ற பெண் பயணி ஒருவரிடமிருந்து சுமார் 6.50 லட்சம் மதிப்புள்ள தங்கக் கட்டிகளை இலங்கை சுங்கத் துறையினர் கைப்பற்றினர்.

இந்நிலையில், இன்று ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள எஸ்.பி.பட்டினம் பகுதிக்கு இலங்கையிலிருந்து தங்கம் கடத்தி வரப்பட்டுள்ளதாக மத்திய வருவாய் சுங்கப் பிரிவினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, மத்திய வருவாய் சுங்கப் பிரிவு அதிகாரி பாரிவள்ளல் தலைமையில், எஸ்.பி.பட்டினத்தில் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு நின்றுகொண்டிருந்த தொண்டியைச் சேர்ந்த ராவுத்தர் என்பவரை சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் பிடித்து விசாரித்தனர்.

அப்போது, ராவுத்தரின் கையில் இருந்த பையில்,  2 கிலோ தங்கமும் அவரது இடுப்பைச் சுற்றி சுமார் 6 கிலோ தங்கமும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, ராவுத்தரை கைதுசெய்த அதிகாரிகள், அவரை மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கொண்டு சென்றனர். தங்கத்தைப் பறிமுதல்செய்தனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க