கிராம மக்களை மிரளவைத்த மலைப்பாம்பு!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகிலுள்ள ஆத்தங்குடி கிராமத்தில், நேற்று இரவு ஒரு வீட்டில் புகுந்த மலைப்பாம்பு, கிராம மக்களை கதிகலங்கவைத்தது. 

ஆத்தங்குடி கிராமம், வனப்பகுதிக்கு அருகே அமைந்துள்ளது. நேற்று அந்தப் பகுதியில் சற்று லேசான மழை பெய்துகொண்டிருந்ததால் காட்டுபகுதியிலிருந்து வெளியேறிய 15 அடி நீளமும் 55 கிலோ எடையுள்ள மலைபாம்பு, கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் சமையல் அறைக்குள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த விறகுக்குள் புகுந்துகொண்டது. இது, வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரியவில்லை, சில மணி நேரம் ஆனபிறகு, வீட்டில்  உள்ளவர்களுக்கு உஷ்... உஷ் என்று சத்தம் கேட்கவே, பயந்து போய் தீயணைப்பு அதிகாரி ஆறுமுகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனே தீயணைப்பு அதிகாரிகள் அந்த வீட்டுக்கு வந்து வெகு நேர போராட்டத்துக்குப் பின் அந்தப் பாம்பைப் பிடித்தனர். அப்போது, திருவிழா கூட்டம் போல ஊரே கூடி வேடிக்கைபார்த்தது.  பிடிக்கப்பட்ட மலைப்பாம்பு, வனத்துறை அதிகாரிகளிடம்  ஒப்படைக்கப்பட்டது.

தீயணைப்பு நிலைய அதிகாரி ஆறுமுகம் பேசும்போது, “பிடிக்கப்பட்ட மலைப்பாம்பு 15  அடி நீளமுடையது என்பதால், ஒரு ஆளையே விழுங்கும் அளவுக்கு அபாயகரமானது. மலையில் உள்ள இந்தப் பாம்பு எப்படி இங்கே வந்தது என்பது தெரியவில்லை. 10 கிலோ மீட்டர் தூரம் தாண்டி வந்துள்ளது. கனத்த உடம்பை வைத்துக்கொண்டு அது மிக வேகமாக நகரக்கூடிய தன்மையைக்கொண்டிருந்தது ஆச்சர்யமாக இருக்கிறது” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!