தண்ணீருக்காக 17 ஆண்டுகள் தவம்..! – தவிக்கும் மக்கள்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி ரோட்டில் உள்ளது, பொம்மிநாயக்கன்பட்டி. இந்தப் பகுதியில் சுமார் 25 குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்தக் கிராமத்தில், சுமார் 17 வருடங்களாக முறையான குடிநீர் வசதி, சாலை வசதி, தெருவிளக்கு வசதி செய்துகொடுக்கவில்லை. தங்களுக்குத் தேவையான வசதிகளை உடனே செய்துகொடுக்கும்படி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

அவர்களிடம் பேசியபோது, ``நாங்கள் பொம்மிநாயக்கன்பட்டி வடக்கு காலனிப் பகுதி மக்கள். எங்கள் பகுதியில் கடந்த 17 வருடங்களாக குடிநீர் வசதி, தெருவிளக்கு, சாலை வசதி இல்லை. எத்தனையோ அதிகாரிகளிடம் மனு கொடுத்துப் பார்த்தோம். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. விஷப் பாம்புகள் நடமாடும் பகுதி எங்கள் பகுதி. தெருவிளக்கு இல்லாததால், குழந்தைகள் வீட்டைவிட்டு வெளியே வர முடியவில்லை. இரவு நேரங்களில் ஏதோ காட்டுக்குள் இருப்பதுபோல இருக்கும். இந்த இருட்டைப் பயன்படுத்தி, இரவு நேரங்களில் திருடர்கள் வருகிறார்கள். தினம் தினம் பயத்தில்தான் வாழ்கிறோம்`` என்றனர்.

இதுதொடர்பாக பெரியகுளம் வட்டார வளர்ச்சி அலுவலரை போனில் தொடர்புகொண்டு பேசியபோது, ``அந்த மக்களின் மனு எனக்கு கிடைக்கப்பெற்றிருக்கிறது. அதன் அடிப்படையில் நேரில் அப்பகுதிக்குச் சென்று ஆய்வு நடத்த இருக்கிறேன். அவர்கள் சொல்வதுபோல குறைகள் இருப்பின் அதைக் களைய உடனே நடவடிக்கை எடுப்பேன்`` என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!