வெளியிடப்பட்ட நேரம்: 10:54 (28/11/2017)

கடைசி தொடர்பு:10:54 (28/11/2017)

ப்ளஸ் டூ மாணவர் தற்கொலை! - ஆசிரியை மீது வழக்குப் பதிவு

கோவை அருகே உள்ள சோமனூரில், ஆசிரியை திட்டியதால் ப்ளஸ் டூ படித்துவந்த  அருள்செல்வன் என்ற மாணவர் தற்கொலை செய்துகொண்டார்.

அருள்செல்வன்

கோவை சோமனூர் பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை என்பவரின் மகன் அருள்செல்வன். அங்குள்ள ஏ.ஆர்.சி மெட்ரிகுலேஷன் பள்ளியில் ப்ளஸ் டூ படித்துவந்தார். அந்தப் பள்ளியில் வேதியியல் ஆசிரியையாகப் பணியாற்றும் சங்கீதா, அருள்செல்வனைத் திட்டி டார்ச்சர் செய்ததாக, தனது பெற்றோரிடம் மாணவன் அருள்செல்வன் ஏற்கெனவே புகார் கூறியிருந்தார்.

இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக அருள்செல்வனின் பெற்றோர், பள்ளியின் தலைமை ஆசிரியரைச் சந்தித்துப் பேசியதாக கூறப்படுகிறது. ஆனால் மாணவன் அருள்செல்வனை, ஆசிரியை சங்கீதா தொடர்ந்து திட்டிவந்ததாக மாணவன் அருள்செல்வன் குற்றம் சாட்டினார். இதனால் மனமுடைந்த மாணவன் அருள்செல்வன், நேற்று மாலை பள்ளி முடிந்துவந்தவுடன், தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார்.

இதைத் தொடர்ந்து, அருள்செல்வனை தற்கொலைக்குத் தூண்டியதாக, பெற்றோரின் புகார் அடிப்படையில், ஆசிரியை சங்கீதா மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர். இந்தச் சம்பவம், கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.