வெளியிடப்பட்ட நேரம்: 11:09 (28/11/2017)

கடைசி தொடர்பு:11:09 (28/11/2017)

கோவை: போலீஸ்காரரின் உயிரைப் பறித்த டெங்கு!

டெங்கு காய்ச்சல் காரணமாக, கோவை ஆயுதப்படை போலீஸ் ராமர் உயிரிழந்தார்.

ராமர்

தமிழகத்தில், கடந்த சில மாதங்களாகவே டெங்கு காய்ச்சல் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைத்து வயதினரும் டெங்கு காய்ச்சலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை அரசு குறைத்துக்காட்டுவதாக தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன.

இந்நிலையில், கோவை மாநகர ஆயுதப்படை வாகனப்பிரிவு போலீஸாகப் பணியாற்றிவந்தவர், ராமர் (39). இவர், அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் பாதுகாப்புக்குச் செல்லும் பணியில் ஈடுபட்டுவந்தார். மதுரை திருமங்கலம் அருகே உள்ள உப்பிலிகுண்டு கிராமம்தான் ராமருக்குச் சொந்த ஊர். இவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படவே, கடந்த 22-ம் தேதி முதல் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்தார்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தநிலையில், சிகிச்சை பலனின்றி ராமர் இன்று அதிகாலை உயிரிழந்தார். அவருக்கு மனைவி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.