வெளியிடப்பட்ட நேரம்: 10:23 (28/11/2017)

கடைசி தொடர்பு:10:40 (28/11/2017)

காங்கிரஸ் முன்னாள் எம்.பி., வள்ளல்பெருமாள் காலமானார்!

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.,  வள்ளல்பெருமாள், உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். இவருக்கு வயது 66. சரளா என்ற மனைவியும், ஷிவ்மோகா என்ற மகனும் உள்ளனர்.

vallal perumal
   

கடலூர் மாவட்டம் வடலூருக்கு அருகில் உள்ள ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி., வள்ளல்பெருமாள். இவர், சுவாமி சகஜானந்தாவை மானசீக குருவாக ஏற்றுக்கொண்ட தீவிர ஆன்மிகவாதி. தந்தை பக்கிரிசாமி, பெரியாரின் பகுத்தறிவுப் பாசறையைப் பின்பற்றி சாகும்வரை கறுப்புச் சட்டை அணிந்துவந்தாலும், வள்ளலாரின் கொள்கையின் தீவிர பற்றாளர். அதனால்தான் இவருக்கு வள்ளல்பெருமாள் என்று பெயர் வைத்துள்ளார். சிதம்பரம் தொகுதியிலிருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் இவர், 1984, 1989, 1991 ஆகிய மூன்று முறை மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கடந்த 2001-ம் ஆண்டில், காட்டுமன்னார்கோயில் சட்டப்பேரவை தொகுதியிலிருந்து காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை கட்சிமூலம் சட்டப் பேரவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர், சில மாதங்களுக்கு முன்னால் உடல் நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார். 

என்.எல்.சி விரிவாக்கத்திற்குப் பெரிதும் வித்திட்டவர் இவர். இவரது பதவிக் காலத்தில், வாண்டையாருக்கும் - வன்னியருக்கும், வன்னியருக்கும் - தலித்துக்கும் இடையே பெரும் கலவரம் உருவாகும் சூழல் ஏற்பட்டபோது, தனது சாமர்த்தியத்தால் அதை முறியடித்து, கடலூர் மாவட்ட அனைத்துத் தரப்பு மக்கள் மத்தியில் நீங்கா முத்திரை பதித்தார். அதனால்தான் இவர், தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சாதிச் சாயம் பூசப்படாத சிறந்த அரசியல்வாதியாகத் திகழ்ந்தார். ப.சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளர் என்று சொல்லப்பட்டாலும், ப.சிதம்பரம் இவருக்கு ஜூனியர் என்பது குறிப்பிடத்தக்கது.