வெளியிடப்பட்ட நேரம்: 11:53 (28/11/2017)

கடைசி தொடர்பு:12:22 (28/11/2017)

‘இனி யாரும் ட்விட்டரில் கருத்து பதியாதீங்க!’ - ஓ.பன்னீர்செல்வத்திடம் கடுகடுத்த எடப்பாடி பழனிசாமி

 எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்

சென்னையில் நடந்த அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 'இனி யாரும் ட்விட்டரில் கருத்து பதியாதீங்க' என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சொல்லச் சொன்னதாகப் பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. 

இரட்டை இலைச் சின்னம் கிடைத்த பிறகு, சென்னை ராயப்பேட்டையில் அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சில நாள்களுக்கு முன்பு திருப்பூரில் நடந்த அ.தி.மு.க கூட்டத்திலும் இரண்டு தரப்பினருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இணைந்த பிறகும் அவர்கள் ஒற்றுமையாக இல்லை என்பது பல சந்தர்ப்பங்களில் வெளிப்படுகின்றன.

சில நாள்களுக்கு முன்பு, ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மைத்ரேயன் எம்.பி, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்த கருத்து விஸ்வரூபம் எடுத்தது. அடுத்து, மதுரையில் நடந்த முப்பெரும் விழாவில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அழைப்பு இல்லை என்று அவரின் ஆதரவாளர்கள் ட்விட்டர் பக்கத்தில் கொந்தளித்தனர். அதன்பிறகு, அந்தப் பிரச்னை அமைதியாகி இருந்த நேரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நேற்றைய பேச்சு மீண்டும் சர்ச்சைக்குள்ளானது.

அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம்

இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க நிர்வாகிகள், "அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, இனி யாரும் ட்விட்டர் பக்கத்தில் அ.தி.மு.க தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பதிவு செய்ய வேண்டாம் என்று ஓ.பன்னீர்செல்வம் அண்ணன் சொல்லச் சொன்னதாகக் கூறினார். ட்விட்டர் என்றதும் கூட்டத்திலிருந்த கட்சியினர் சிரித்தனர். அப்போது, மேடையிலிருந்த மைத்ரேயன் எம்.பி. நான், தன்னிலை விளக்கம் கொடுக்க வேண்டும் என்று கூறினார். ஆனால், அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்தச் சமயத்தில் மைத்ரேயன், `நான் அம்மாவின் உண்மை விசுவாசி' என்று சொல்லவும் அதற்கு கட்சியினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். நீங்கள் மட்டுமா அம்மாவின் விசுவாசி... நாங்கள் இல்லையா என்று சத்தம் போடத்தொடங்கினர். பிரச்னை பெரிதாகத் தொடங்கியதும் ஓ.பன்னீர்செல்வம், அனைவரையும் அமைதிப்படுத்த முயன்றார். அடுத்து, எடப்பாடி பழனிசாமியும் கட்சியினரைச் சமரசப்படுத்தினார். ஆனால், வாக்குவாதம் முற்றி, வார்த்தைகள் தடித்தன.

இதையடுத்து, மைக்கைப்பிடித்த அமைச்சர் செங்கோட்டையன், `அம்மா (ஜெயலலிதா) இருந்தபோது ராணுவக் கட்டுப்பாட்டோடு நாம் செயல்பட்டோம். அதுபோல தற்போதும் இருக்க வேண்டும். நீங்கள் உங்களுடைய கருத்தைச் சொல்ல வேண்டும் என்றால் கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் தனியாகச் சொல்லுங்கள்' என்றார். அதன்பிறகே அனைவரும் அமைதியாகினர்" என்றார்.

செங்கோட்டையன் பேச்சுக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ள மூத்த நிர்வாகி ஒருவர், உள்ளே அழைத்து எங்களை மிரட்டுகிறீர்களா என்று கூற அவரையும் மேடையிலிருந்தவர்கள் அமைதிப்படுத்தினர். இதனால், ஆர்.கே.நகர் தேர்தல், வேட்பாளர் தேர்வு என எதையும் பேசாமல் கூட்டம் முடிந்துவிட்டது. அதன்பிறகு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் மீண்டும் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலிருந்து யாரும் பங்கேற்கவில்லை. ஆனால், டி.டி.வி.தினகரனை ஆதரித்த எம்.பி.க்கள் நவநீதகிருஷ்ணன், விஜிலா, கோகுலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர். இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த மூன்று எம்.பி.க்களின் மனமாற்றத்துக்கு பதவி பறிக்கப்படும் என்ற மிரட்டலே முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது. மூன்று எம்.பி.க்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த தகவலையறிந்த தினகரன், தனக்கு நெருக்கமானவர்களிடம் தன்னுடைய வேதனையைப் பகிர்ந்துள்ளதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன.


டிரெண்டிங் @ விகடன்