வெளியிடப்பட்ட நேரம்: 18:48 (28/11/2017)

கடைசி தொடர்பு:18:48 (28/11/2017)

வீடில்லாத 78 பேருக்கு வீடு கட்டிக் கொடுத்த கல்லூரிப் பேராசிரியை!

ல்லூரிப் பேராசிரியை சுனிலின் மனதை, அவரின் மாணவன் ஒருவன் ரொம்பவே பாதித்திருந்தான். மாணவன் முகத்தில் வறுமை தாண்டவமாடும். அவன் வசித்த வீடும் பொத்தல் பொத்தலாக இருந்தது. கஷ்ட நிலையிலும் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், கல்லூரிக்கு வந்துகொண்டிருந்தான். சுனிலுக்கு, அந்த மாணவனுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம். கல்லூரியில் என்.எஸ்.எஸ் பொறுப்பாளராக இருந்தார் சுனில். அந்த மாணவனுக்கு வீடு கட்டித் தர, மாணவ - மாணவிகள் மூலம் பணம் சேர்க்கத் தொடங்கினார். சுமார் 60 ஆயிரம் ரூபாய் சேர்ந்தது. 

கல்லூரிப் பேராசிரியை சுனில்

 Pic Courtesy : Malayala Manorama

திரண்ட பணத்தை வைத்தும் தன் கையிலிருந்து கொஞ்சம் பணம் போட்டு, 2006-ம் ஆண்டு அந்த மாணவனுக்கு வீடு கட்டிக் கொடுத்தார். வீட்டின் சாவியைப் பெற்ற அந்த மாணவன், கண்களில் நீர் ததும்ப நன்றி சொன்னதுதான் சுனிலுக்கு இன்ஸ்பிரேஷன். அவனுடைய முகத்தில் கண்ட அந்த ஆனந்தம், சுனிலை தொடர்ச்சியாக ஏழைகளுக்கு இலவசமாக வீடு கட்டிக் கொடுக்கவைத்தது. அப்படி, கடந்த 11 ஆண்டுகளில் சுனில் கட்டிக் கொடுத்த வீடுகளின் எண்ணிக்கை 78.

கேரளாவில் பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த சுனில், ஓய்வுபெற்ற பிறகு வீடு கட்டிக் கொடுக்கும் சேவையில்தான் முழு நேரமாக ஈடுபட்டுவருகிறார். கடைசியாக அக்டோபர் மாதத்தில் 78-வது வீட்டை 2.50 லட்சம் ரூபாய் செலவில் கட்டி வழங்கினார் அவர். சுனிலின் தன்னலமற்றச் சேவையைக் கேள்விப்பட்டு, வளைகுடா நாடுகளில் வசிக்கும் கேரளவாசிகள் தாராளமாக நிதியை அள்ளி வழங்குகின்றனர். வீடு கட்டுவதற்கு ஆறு, ஏழு மாதங்கள் எல்லாம் ஆகாது.  வெறும் 22 நாள்களில்கூட முழு வீட்டையும் கட்டிக் கொடுத்து சாதனை படைத்திருக்கிறார். கட்டிக் கொடுக்கும் வீடுகள் அனைத்தும் அவரின் முழு கண்காணிப்பில்தான் கட்டப்படும். அதனால், பெரும்பாலும் பத்தனம்திட்டா அருகிலேயே பயனாளர்களைத் தேர்வுசெய்கிறார். 

மின்னல் வேகத்தில் பணிகள் நடைபெறும். இலவசமாகக் கட்டிக் கொடுக்கிறோம் என்பதற்காக, எந்த அலட்சியமும் இருந்ததில்லை. தொடர்ச்சியாக, கட்டிக் கொடுத்துவருவதால், அவரே தேர்ந்த இன்ஜினீயராகி மாற்றங்களை உடனடியாகச் செய்யச் சொல்கிறார். சுனிலின் கணவர், ஒரு பிசினஸ்மேன். மனைவியின் பரந்த நோக்கத்தையும் அர்ப்பணிப்பையும் புரிந்துகொண்ட அவரும்கூட  வீடு ஒன்றைக் கட்டுவதற்கு ஸ்பான்சர் செய்துள்ளார். இந்தத் தம்பதிக்கு ஒரே ஒரு மகன். அயர்லாந்தில் படித்துவரும் அவரும், தாயிடம் வீடு கட்டும் திட்டங்கள் பற்றி அடிக்கடி கேட்பதுண்டு.

கட்டுமானத்தில் ஈடுபடும் பணியாளர்களுக்கும் நல்ல சம்பளம் கொடுப்பதை சுனில் வாடிக்கையாக வைத்துள்ளார். ``உழைப்பாளர்களுக்கு நல்ல ஊதியம் கொடுக்கும்போது மனநிறைவுடன் பணிபுரிவார்கள். அதை அவர்கள் வேலையிலும் காட்டுவார்கள்'' என்கிறார் சுனில் 

இப்போது, பலரும் அவரை தொடர்புகொண்டு, ``என் சார்பில் ஒரு வீடு கட்டிக் கொடுங்கள்'' என்று நிதியளிக்கிறார்கள். பெரும்பாலும் கிச்சனுடன் இரு அறைகள்கொண்ட வீட்டைக் கட்டிக் கொடுக்கிறார். பத்தனம்திட்டா பகுதியில் வீடு இல்லாதவர்களுக்கு என்றாவது ஒருநாள் வீடு கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கை உருவாகியிருக்கிறது என்றால், அதற்குக் காரணம் சுனில்!

``கல்லூரியில் பணிபுரிந்தபோது, என்னால் முழுமையாக ஈடுபாடு காட்ட முடியவில்லை. வகுப்பு முடிந்தவுடன் சென்று கட்டுமானப் பணிகளைப் பார்வையிடுவேன். இப்போது ஓய்வுபெற்றுவிட்டதால், நானே கட்டுமானப் பணிகளைக் கண்காணிக்கிறேன். பயனாளிகளை கவனமாகத் தேர்வுசெய்கிறேன். பெரும்பாலான பயனாளிகள் நிலம் வைத்திருப்பார்கள். நாங்கள் வீடு மட்டும் கட்டிக் கொடுப்போம். நிலம் இல்லாதவர்களுக்கு, சில சமயங்களில் பஞ்சாயத்துகளே நிலம் ஒதுக்கித் தரும். தற்போது எட்டு வீடுகள் கட்டிக்கொண்டிருக்கிறேன். அவற்றில் ஆறு வீடுகளின் பணி முற்றிலும் முடிந்துவிட்டது. பொதுவாக ஒரு வீட்டைக் கட்ட ஒருவரிடம் மட்டுமே ஸ்பான்சர் வாங்குகிறேன். பலரிடம் கேட்பதில்லை. அதை ஒரு கொள்கையாகவே வைத்துள்ளேன். கடவுள் புண்ணியத்தால் இதுவரை எந்த நிதி நெருக்கடியும் வந்ததில்லை. விரைவில் 100 வீடுகளை எட்ட வேண்டும். அதுதான் லட்சியம்'' என்கிறார் சுனில்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க