3 எம்.பி-க்கள் அணி மாறியது ஏன்? தினகரன் தடாலடி பதில்

தினகரன்
''எடப்பாடியை சந்தித்த எம்.பி-க்கள் என்னிடம் கூறிவிட்டுதான் அணி மாறினார்கள்'' என்று டி.டி.வி தினகரன் கூறினார்.

திருச்சியில் நேற்று மாலை 52 மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்திய டி.டி.வி தினகரன், சற்று முன் திருச்சி சங்கம் ஹோட்டலில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். 
 
அப்போது அவர்,  “இரட்டை இலை சின்னம் வழங்கியதில் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக தீர்ப்பு வழங்கியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு இறுதித் தீர்ப்பல்ல. மேல்முறையீடுசெய்து எங்களுடைய உரிமைகளை மீட்டெடுப்போம். அதேபோல, கட்சிக் கொடியைப் பயன்படுத்துவதுகுறித்து தேர்தல் ஆணையம் எதுவும் கூறவில்லை. நடக்கவுள்ள ஆர்.கே.நகர் தேர்தலில் மீண்டும் தொப்பி சின்னத்தைக் கேட்போம். ஆனால், தொப்பி சின்னத்தை முடக்க மாநில தேர்தல் ஆணையம் முயற்சிசெய்துவருகிறது. மத்திய அரசின் ஓர் அங்கம்தான் தேர்தல் ஆணையம் என்று குற்றம் சாட்டிய தினகரன், தனிக் கட்சி தொடங்கும் திட்டம் இல்லை'' எனத் திட்டவட்டமாக மறுத்தார். 
 
மேலும் அவர் கூறுகையில், ''ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றிபெற்று அ.தி.மு.க-வை மீட்போம். எனது அணியில் இருந்த விஜிலா சத்யானந்த், கோகுல கிருஷ்ணன், நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட எம்.பி-க்கள் என்னிடம் கூறிவிட்டுதான் அணி மாறினார்கள். பதவி பயத்தால்தான் அவர்கள் முதல்வர் அணியில் சேர்ந்துள்ளனர். ஆர்.கே.நகர் தேர்தலில் இடைத்தேர்தலில் யாரிடமும் ஆதரவு கோரும் எண்ணம் இல்லை. இந்தத் தேர்தலில் எங்களுக்கும் தி.மு.க-வுக்கும்தான் போட்டி. ஆர்.கே நகர் இடைத்தேர்தலில், நிச்சயம் நாங்கள்தான் வெற்றிபெறுவோம். தேர்தல் முடியும் வரை வருமான வரித்துறையினரின் சோதனை நடக்கத்தான்செய்யும். நத்தம் விஸ்வநாதன் அன்பு நாதன் டைரியில் முடங்கிக்கிடக்கிறார்'' என்றவர்,  
 
அமைச்சர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவே எனக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்துவருகின்றனர். வயிற்றுப்பிழைப்புக்காகவும், பயத்தாலும் கருத்து தெரிவிக்கும் அமைச்சர்களுக்குப் பதில் கூறத் தேவையில்லை. மேலும், ஜெயலலிதாவின் வாரிசு என்று நீதிமன்றத்தை நாடியுள்ள அமிர்தாவின் பின்னணிகுறித்து எனக்குத் தெரியாது” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!