`திருச்செந்தூர் அரசு மருத்துவமனையைத் தரம் உயர்த்தினால் பல உயிரிழப்புகள் தடுக்கப்படும்'

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்திடக்கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

Vck demonstration in thoothukudi

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தெற்கு மாவட்டம் சார்பில் 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவரின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பேசிய தெற்கு மாவட்டச் செயலாளர் முரசு தமிழப்பன், "தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் முருகக்கடவுளின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் வருடத்தில் 6 மாதங்கள் முக்கியத் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக திருச்செந்தூர் அருகிலுள்ள குலசேகரன்பட்டினத்தில் தான் தசரா 10 நாள்கள் திருவிழா நடைபெறும். இந்தக் கோயில்களில் சாதாரண நாள்கள், விசேஷ நாள்கள் என வெளி மாவட்ட, வெளி மாநில பக்தர்கள் தரிசனத்துக்காக வந்துசெல்கிறார்கள். 

திருச்செந்தூரிலுள்ள அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை. இங்கு அனுமதிக்கப்படும் நோயாளிகள் மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கோ அல்லது நெல்லை அரசு மருத்துவமனைக்கோ அனுப்பி வைக்கப்படுகிறார்கள். தூத்துக்குடி  மாவட்டத்தில் கோவில்பட்டியில்தான் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி, விளாத்திகுளம் ஆகிய தாலுகாக்களைச் சேர்ந்தவர்கள் அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறார்கள். 

ஆனால், ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், திருச்செந்தூர் ஆகிய தாலுகாக்களைச் சேர்ந்த மக்கள் மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். மாவட்டம் முழுவதிலும் இருந்து நோயாளிகள் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கே அனுப்பி வைக்கப்படுவதால் நெருக்கடியான சூழல் ஏற்படுகிறது. எனவே, சுற்றுலாத் தலமான திருச்செந்தூரில் உள்ள மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்திட வேண்டும். இதுகுறித்து பலமுறை போராட்டம் நடத்தினோம். சில மாதங்களுக்கு முன்பு நடந்த போராட்டத்தில் அதிகாரிகளோடு பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. தரம் உயர்த்துவதால் திருச்செந்தூர், சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 3 தாலுகா மக்களும் பயன்பெறுவார்கள். நோயாளிகளின் வீண் அலைச்சலும், பல உயிரிழப்புகளும் தடுக்கப்படும். கடலில் வீணாகக் கலக்கும் தாமிரபரணி நதிநீரை பாதுகாத்திட புன்னக்காயல் முதல் பழையகாயல் வரை தடுப்பணை அமைத்து நீர்த்தேக்கம் அமைப்பதற்கான நடவடிக்கையும் விரைவில் எடுக்க வேண்டும்." என்றார். 

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!