மீன்வளத்துறையில் நடக்கும் முறைகேட்டைக் கண்டுகொள்ளாத கலெக்டர்! மீனவர்கள் குற்றச்சாட்டு

பாரூர் பெரிய ஏரி

கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூர் பெரிய ஏரி பங்கு மீனவர்கள், மீன்வளத்துறையில் தொடர்ந்து முறைகேடு செய்துவருவதாகப் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இதுகுறித்து பங்கு மீனவர் முருகன் நம்மிடம் பேசுகையில், ''பாரூர் பெரிய ஏரியில் நாள்தோறும் 2 ஆயிரம் கிலோ மீன்களைப் பிடித்து விற்பனை செய்துவருகின்றனர். கடந்த 2011 வரை அரசே நேரடியாக அதிகாரிகளை வைத்து விற்பனை செய்துவந்தது. ஆனால், அரசியல் தலையீடு காரணமாக, தமிழகம் முழுவதும் உள்ள பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான ஏரிகளை ஏலம்விட அரசு கொள்கை முடிவு எடுத்தது. அதுவரை எங்களுக்கு 1:1 என்ற விகிதாச்சாரப்படி அரசும் பங்கு மீனவர்களும் பகிர்ந்துகொண்டோம்.

ஆனால், 2011-க்குப் பிறகு, அரசின் கொள்கை முடிவால் ஏரிகள் அனைத்தும் தனியாருக்கு ஏலம் விடப்பட்டன. எங்களுக்கான வருவாயில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தனியாருக்கு ஏரியை ஏலம் விட்ட பிறகு, பங்கு மீனவர்களின் தலைவர் தங்கமணி, கிலோவுக்கு 16 ரூபாய் மட்டுமே கூலியாகக் கொடுக்கிறார். ஆனால், அவர் ஒரு கிலோ மீன் 75 ரூபாய் முதல் 130 வரை விற்பனைசெய்கின்றார். அரசு வழங்க உத்தரவிட்டுள்ள கூலியைக் கொடுக்க மறுக்கிறார். ஆனால், கிருஷ்ணகிரி அணையில் உள்ள பங்கு மீனவர்களுக்கு மட்டும் ரூ.25 கூலி கொடுக்கின்றனர். இதனால் பாரூர் பெரிய ஏரி பங்கு மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 

இதுமட்டும் இல்லை, பாரூர் பெரிய ஏரியில் 37 பங்கு மீனவர்கள் தற்போது வரை செயல்பட்டுவருகிறோம். ஆனால், தலைவர் தங்கமணி எங்களின் ஒப்புதல் இல்லாமல் புதிதாக மூன்று பங்கு மீனவர்களைப் புகுத்தியுள்ளார். இது, பங்கு மீனவர்களின் உரிமைக்கு எதிரான செயல் என்று பலமுறை புகார் கொடுத்தும், மாவட்ட ஆட்சியரும் மீன்வளத்துறையும் எங்கள் புகார்மீது நடவடிக்கை எடுக்கவில்லை. மீன்வளத்துறையைக் கண்டித்து, பங்கு மீனவர்கள் அனைவரும் ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளோம்'' என்று தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!