நீதிமன்ற அனுமதியுடன் துபாய் சென்றார் நடிகர் திலீப்!

கேரள நடிகை ஒருவரை கடத்தித் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் தொடர்புடைய நடிகர் திலீப், துபாய் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதித்ததால், இன்று அவர் தனது தாயாருடன் புறப்பட்டார்

நடிகர் திலீப்

கேரளாவை பரபரப்புக்கு உள்ளாக்கிய நடிகை கடத்தல் சம்பவம், பிப்ரவரி 17-ம் தேதி நடைபெற்றது. இது தொடர்பாகக் கைதுசெய்யப்பட்ட பல்சர் சுனில் என்பவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், நடிகர் திலீப் கைதுசெய்யப்பட்டார். 300 சாட்சிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, செல்போன் உரையாடல் உள்ளிட்ட 400 ஆவணங்களை போலீஸார் நீதிமன்றத்தில் தாக்கல்செய்தனர். அத்துடன், இந்த வழக்கில் 8-வது குற்றவாளியாக நடிகர் சுனில் சேர்க்கப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்பட்டது. 

இந்த நிலையில், திலீப் கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்த மனுவில், துபாயில் ஹோட்டல் திறக்க இருப்பதால், அங்கு சென்று 6 நாள்கள் தங்கியிருக்க நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். கோர்ட் பாதுகாப்பில் உள்ள தனது பாஸ்போர்ட்டை வழங்க வேண்டும் எனவும் கோரியிருந்தார். இதை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், அவரை துபாய் செல்ல அனுமதித்தது. 4 நாள்கள் மட்டுமே அனுமதி வழங்கிய நீதிமன்றம், பல்வேறு நிபந்தனைகளை விதித்தது.

அதைத் தொடர்ந்து, அங்கமாலி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் இருந்த தனது பாஸ்போர்ட்டை நேற்று பெற்றுக்கொண்ட திலீப், இன்று காலை துபாய் புறப்பட்டார். அவரது தாயாரும் உடன் சென்றார். முன்னதாக, அவர் மனைவி காவ்யா மாதவன், மகள் மீனாட்சி ஆகியோருடன் செல்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் தாயாருடன் புறப்பட்டுச்சென்றார். துபாய் ஹோட்டலை திலீப்பின் நெருங்கிய நண்பரும் தொழில் பங்குதாரருமான நாதிர்ஷாவின் தாயார் திறந்துவைக்கிறார்.    
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!