வெளியிடப்பட்ட நேரம்: 14:23 (28/11/2017)

கடைசி தொடர்பு:16:58 (28/11/2017)

8 கல்லூரி மாணவிகள், 16 மணி நேரம் பயிற்சி... வில்வித்தையில் ஒலிம்பிக் பதக்கம் இலக்கு!

ஜெயலலிதா உயிரோடிருந்த காலங்களில் ரத்தத்தின் ரத்தங்களைவிட அதிகம் கம்பு சுற்றியவர் ஷிஹான் ஹூசைனி. ரத்தத்தால் ஓவியம், ரத்தத்தால் சிற்பம், சிலுவையில் ஆணியடித்துக்கொள்வது என பரபரப்பு கிளப்பியவர் சமீபமாக தம் கட்டி வருவது ஏன் என அவரிடமே கேட்டோம்.

``நான் மட்டுமல்ல, ஜெயலலிதாவுக்குப் பிறகு தமிழக அரசியலே மாறித்தான் இருக்கு. நான் இப்போ முழுநேர வில்வித்தைப் பயிற்சியாளரா இருக்கேன். இப்போ என்  கனவு எல்லாமே ஒலிம்பிக்கில் என் மாணவிகளுக்கு பதக்கம் வாங்கித் தருவது மட்டும்தான்!'' என்றார். 

``கராத்தே ஹூசைனி எப்படி  வில்வித்தை ஹூசைனியானார்?''

``வில்வித்தை, நான் கராத்தே கற்றுக்கொள்வதற்கு முன்பே கற்றுக்கொண்ட கலை. தமிழ்நாட்டில் வில்வித்தையைக் கற்றுத்தர, முறையான பயிற்சிப் பள்ளிகள் இல்லை. அதனால் லண்டன் சென்று வில்வித்தையைக் கற்று வந்தேன். தமிழ்நாட்டில் முதன்முதலாக `ரீகர்வ் போவ்' எனச் சொல்லப்படும் நவீன வில்லையும் `காம்பவுண்ட் போவ்' எனப்படும் இயந்திர வில்லையும் கொண்டுவந்தேன். இது அதிக செலவு பிடித்த கலை என்பதால் மக்களிடம் விழிப்பு உணர்வு இல்லை. நானும் கராத்தேயில் எனது ஆர்வத்தைத் திருப்பினேன்.''

வில்வித்தை

``அப்படியென்ன செலவு?'' 

``வில், அம்பு உள்ளிட்ட தேவையான கருவிகள், பாதுகாப்பு உபகரணங்களின் விலை இரண்டரை லட்சத்துக்கும் மேல். வில்லில் பயன்படுத்தப்படும் ஓர் அம்பின் விலையே 3,500 ரூபாய். உடைந்தால் மீண்டும் பயன்படுத்த முடியாது. அரசு செலவில் கற்றுக்கொள்ள விரும்பினால், `நீ நல்லா ப்ராக்டீஸ் பண்ணிட்டு சிறப்பாக வா, அதன் பிறகு செலவு செய்கிறேன்' என்கிறது அரசு.''  

``வில்வித்தை ஈஸியா?''

``இது ஓர் அபாயகரமான கலை. வில்லிலிருந்து புறப்படும் அம்பின் வேகம் துப்பாக்கி தோட்டாக்களைவிட வேகமானதாகவும், கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருக்கும். எனவே, இதைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதற்காக, வில் யாரெல்லாம் வைத்திருக்கிறார்களோ, அவர்களை சங்கத்தில் பதிவுசெய்துகொள்ள வலியுறுத்துவேன். இதைக் கற்றுக்கொள்ள மனதை ஒருநிலைப்படுத்துவது மிக முக்கியம்.  இந்த வில், அம்பைத் தூக்கிப் பயன்படுத்துவதற்கு உடல் பலமும் மிக அவசியம்.''

``ஒலிம்பிக் பதக்கம் எப்படி சாத்தியம்?''

`` `நீங்க கராத்தேயில் பாறாங்கல்லை உடைக்கிறது, நாகப்பாம்பை கடிக்க விடுறது, கையில காரை ஏத்துறது... இதெல்லாம் பண்றீங்க. அப்போ, நீங்க ஏன் நம்ம நாட்டுக்கு ஒலிம்பிக் மெடல்களை வாங்கிக் கொடுக்கக் கூடாது?'ன்னு என்னைக் கேட்டாங்க. ஒலிம்பிக்கில் கராத்தே கிடையாது. வில்வித்தை பக்கம் திரும்பினேன். வில்வித்தைப் பயிற்சியாளர்களில் மூன்று லெவல்கள் இருக்கின்றன. மூணாவது லெவலில் என்னையும் சேர்த்து மொத்தம் மூன்று பேர் மட்டுமே தேர்ச்சிபெற்றுள்ளோம்.

கடந்த ரியோ ஒலிம்பிக்காக இந்தியாவிலிருந்து சென்ற இந்திய வில்வித்தை அணிக்கு மனவளப் பயிற்சி கொடுப்பதற்காக நிர்வாகத்துடன்  பேசினேன். கடைசி நேரத்தில் என் பயிற்சியின் தாக்கத்தால் ஏற்படும் விளைவுகள் தேவையற்ற சிக்கலை ஏற்படுத்தும் என அஞ்சினார்கள். அதனால் என்னை அனுமதிக்கவில்லை. அந்நேரம் அங்கிருந்த கொரிய வில்வித்தை அணியின் பொதுச்செயலாளர் என்னை அழைத்து அவரது அணிக்கு மனவளப்பயிற்சி அளிக்கும்படி கூறினார். அந்த ரியோ ஒலிம்பிக்கில் அனைத்து தங்கப்பதக்கங்களையும் கொரியா வென்றது. அவர் என்னைப் பாராட்டி மெயில் அனுப்பினார். ரியோவிலிருந்து திரும்பியதும், அகில இந்திய வில்வித்தை சங்கக் கூட்டத்தில், இதைச் சுட்டிக்காட்டி கடுமையாகப் பேசினேன். `இனிமேலாவது என் கையில் ஓர் அணியைக் கொடுங்கள், அடுத்த ஒலிம்பிக்குக்கு தயார்செய்கிறேன்'னு சொன்னேன். உடனே, `இவ்ளோ சொல்லும் நீங்களே ஓர் அணியைத் தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுக்கவேண்டியதுதானே'னு கேட்டாங்க. ஒருவகையில் சரின்னு பட்டது. 

வில்வித்தை ஹுசைனி

அப்போதுதான், `ஷாசன்' என்ற பெரிய நிறுவனத்தின் நிர்வாகியும், சென்னை ஷாசன் ஜெயின் பெண்கள் கல்லூரியை நடத்திவருபவருமான அபய் குமார் ஜெயினைச் சந்தித்தேன்.  `எவ்வளவு கோடி வேண்டுமானாலும் செலவளிக்கத் தயார். ஒலிம்பிக்கில் இந்தியா தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும்' என்றார். அவரது இன்னொரு கோரிக்கை, எங்களது கல்லூரியைச் சேர்ந்த மாணவிகளுக்குப் பயிற்சி கொடுத்து ஒலிம்பிக்குக்கு தயார்ப்படுத்துங்கள் என்பதுதான்.

மறுநாளே அவரது கல்லூரிக்குச் சென்று மாணவிகள் மத்தியில் உரையாற்றினேன். எனது உரையைக் கேட்டதும் உற்சாகமாக, எட்டு மாணவிகளைத் தேர்வுசெய்து பயிற்சி கொடுக்கும்படியும், அதற்காக ஐந்து கோடி ரூபாய் நிதி வழங்குவதாகவும் கூறினார். ஆனால், அவரிடம் `ஐந்து கோடியெல்லாம் வேண்டாம். பயிற்சிக்கான தேவைகளை மட்டும் செய்துகொடுத்தால் போதும்' எனக் கூறிவிட்டு செயலில் இறங்கினேன். அந்தக் கல்லூரியிலிருந்து மொத்தம் 500 மாணவிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களது வில்வித்தைத் திறமையைச் சோதித்து, அதிலிருந்து வடிகட்டி, எட்டு மாணவிகளை இறுதி செய்தேன். ஒரு பெண்ணின் அப்பா மரவேலைப்பாடு செய்பவர். இன்னொரு பெண்ணின் அப்பா சலவைத் தொழிலாளி. இன்னொருவரின் அப்பா காவலராக இருக்கிறார். மற்றொருவரின் அப்பா மாவுமில் வைத்திருக்கிறார். இப்படி, எட்டு பேருமே சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவர்கள்.''

``இவர்களுக்கான பயிற்சி எப்படி இருக்கிறது?''

``கடந்த 2016, நவம்பர் 11-ம் தேதி பயிற்சியளிக்கத் தொடங்கினேன். டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி அம்மாள் மகளிர் கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் தினமும் பயிற்சி நடக்கிறது. எட்டு மாணவிகளுக்கும் உலகத்தரம் வாய்ந்த நவீன வில்வித்தைக் கருவிகளை ஷாசன் கல்லூரி நிர்வாகியே கொடுத்துள்ளார். தங்குவதற்கு தனி வீடு, வந்து செல்ல வாகனம் கொடுத்துள்ளார். படிப்பு, புத்தகங்கள் அனைத்தும்ஹுசைனி இலவசம். ஒரு நாளைக்கு 12 வேளையாகப் பிரித்து உணவு வசதி செய்து கொடுத்துள்ளார். இந்த எட்டு பேரையும் கவனித்துக்கொள்ள மேலும் எட்டு பேரை பணியில் அமர்த்தியுள்ளோம். இதுவரை நாட்டுக்காக பதக்கம் வெல்வதற்காக தனி நபர், ஒரு கல்லூரி இப்படி தனிப்பட்ட முயற்சி எடுத்து பயிற்சியளித்த வரலாறு கிடையாது.

இந்த எட்டு பெண்களுக்கும் தினசரி 16 மணி நேரம் பயிற்சி அளிக்கிறேன். அதிகாலை 3 மணிக்கெல்லாம் எழுந்துவிடுவார்கள். இதுவரை தமிழக அளவில் நடைபெற்ற அனைத்துப் போட்டிகளிலும் வென்றுள்ளார்கள். பாண்டிச்சேரியில் நடந்த போட்டியில் மட்டும் 19  கோப்பை வென்றனர்.  அடுத்த மாதம் நடைபெறவுள்ள உலகக்கோப்பை போட்டிக்குத் தேர்வாகியுள்ளனர். நவம்பர் 30-ம் தேதி பாங்காக் போகிறார்கள். இவர்கள் நிச்சயம் உலகக்கோப்பையில்  பதக்கங்களை வெல்வார்கள். இந்தப் போட்டிக்காக 12 லட்சம் ரூபாயை அபய்குமார் அளித்துள்ளார்.

உலகக்கோப்பைக்குப் பிறகு 2018, ஜனவரியில் பிரான்ஸ், அடுத்து லாஸ்வேகாஸ், கொரியாவில் நடக்கும் போட்டிகளில் கலந்துகொள்கிறோம். இது ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்கான வாய்ப்பாக அமையும். என் மாணவர்கள் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பிறகே என் சம்பளத்தை நிர்ணயிப்பேன்" என்றார் ஹிஷான் ஹுசைனி.


டிரெண்டிங் @ விகடன்