வெளியிடப்பட்ட நேரம்: 15:15 (28/11/2017)

கடைசி தொடர்பு:16:17 (28/11/2017)

செல்லூர் ராஜு வீடு அருகே துர்நாற்ற ஓடை! 40 வருட அவலம்

ஒரு மாநகரத்தின் மையப்பகுதி அது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்களும் பல்லாயிரம் மனிதர்களும் கடந்துபோகும் இடம். ஆனால், அவ்விடத்திலிருந்து கவனித்தீர்கள் என்றால், அப்பகுதியைக் கடந்துசெல்லும் மனிதர்கள் யாவரும் தங்கள் மூக்கை மூடிக்கொண்டே செல்கின்றனர். ஆம். அவ்வளவு அவல நிலையில் உள்ளது மதுரை வடக்குத் தொகுதியைச் சேர்ந்த 'பந்தல்குடி ஓடை'. இதன் சட்டமன்ற உறுப்பினராக ராஜன் செல்லப்பா உள்ளாா். இந்த ஓடையைப் பற்றி நமக்கு செய்தி வரவே, நமது குழுவினருடன் பயணப்பட்டோம். ஸ்பாட்டுக்கு சென்றவுடன், ஒரு கணம் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகிவிட்டோம். ஏனென்றால், நகருக்குள் உள்ள ஓர் இடம், எவ்வளவு சுகாதாரக்கேடாக இருக்கக்கூடாதோ, அந்த அளவுக்கு சுகாதாரச் சீர்கேட்டை உண்டாக்கிக்கொண்டிருக்கிறது.

இங்கு எப்படித்தான் மக்கள் வசிக்கிறார்களோ! இந்த ஓடை வேறெங்கும்  இல்லை, தமிழக கூட்டறவுத் துறை அமைச்சர் 'செல்லூர் ராஜூ' வீட்டிற்கு மிக அருகில்தான் உள்ளது. அதை ஓடை  என அடையாளம் காண முடியாத அளவுக்கு ஒரு சாக்கடை ஆறாக இருந்தது. அதன் அருகில் செல்லச் செல்ல, அனிச்சையாக நமது கையும் மூக்கை மூடிகொண்டது. இந்த ஓடைக்கு அருகில் சென்று பாா்க்கலாம் என அருகில்  சென்றோம். அங்கிருந்த சிறு அழுக்குக் குட்டையில் சிறுவா்கள் சிலர் விளையாடிக்கொண்டிருந்தனா். அவா்களிடம், ''இங்கு விளையாடாதீர்கள்; நோய் வரும்'' என்று நாம் கூறியதை அவா்கள் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. அவ்வழியே வந்த பாட்டியை வழிமறித்து, ஓடை பற்றிக் கேட்டோம்.

''அத ஏன்பா கேட்கிற ஒரு காலத்துல எப்படி இருந்த இடம் தெரியுமா?  இப்படி நாசமா போயிருச்சு என்றவர், ஒரு பெரு மூச்சுக்குப் பிறகு பாட்டி நம்மிடம் பேசத் தொடங்கினாா். காலையில இந்த ஓடையில குளிச்சுட்டு வேலைக்குப் போவோம். சாயங்காலம் மறுபடியும் வந்து இதுல மீன்பிடிச்சு சாப்பிட்டுட்டு தூங்குவோம்.இங்கிருந்து ஒரு பத்தடி தூரம் ஒரு இறக்கம் இருக்கே... அதான் முன்னாடி இதோட கரையா இருந்துச்சி. அங்க உட்காா்ந்து கதை பேசுறது, ஒரு வீட்ல சமைச்சத  எல்லாரும் சோ்ந்து சாப்பிடுறது ரொம்ப  ஜோரா இருக்கும்பா. என்ன ஒண்ணு  நாள் போகப்போக இந்த ஓடை அழிஞ்சுக்கிட்டே வந்து, ஒண்ணுமில்லாமப் போயிடுச்சு'' என்றார்.

அப்போது லெட்சுமணன் என்ற இளைஞர், ''நாங்களும் எவ்வளவோ மனு போட்டுப்பாா்த்துட்டோம். ஆனா ஒண்ணும் நடக்குற மாதிரி இல்லை.இங்க, காய்ச்சல் வராத ஆளே கிடையாது. நாங்க சம்பாதிக்கிறதே கொஞ்ச காசுதான் அதிலயும் பாதி ஆஸ்பத்திருக்குப் போயிருது என்ன பண்ண. நாங்க வாங்கிட்டு வந்த வரம்போல'' என்று தன் கோபத்தைக் குமுறலாக வெளிப்படுத்தினாா். அப்போது அங்கிருந்தவா்கள்,  ''இது காலை டைம், அவ்வளவா தெரியாது. சாயந்திரம் வந்து பாருங்க நாங்க படுற கஷ்டத்தை'' என்றார். மாலையில் போய் பார்த்தபோது, மிக மிக மோசமான சுற்றுப்புறச்சூழலை கொண்டிருந்தது அவ்விடம். ஐந்து மணிக்கெல்லாம் அங்குள்ள வீடுகளில் சன்னலை சாத்தி விடுகின்றனர். ஏனென்றால் அந்தளவுக்கு கொசுக்களின் தொல்லை.

நம்மால் சில மணித்துளிகள்கூட அந்த ஓடைக்கு அருகே நிற்க முடியவில்லை. அப்போது, அங்குள்ள மக்கள் வாழ்க்கையை நினைக்கும் போது நெஞ்சம் பதைபதைத்தது. ''இந்த ஓடையின் அழிவு, 40 வருடங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டது. அப்பொழுது இதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இப்போதுதான் இதன் பாதிப்பு தெரிய ஆரம்பித்திக்கிறது'' என்றாா் அங்கிருந்த நடுத்தெரு வயதுள்ள நபர். என் தாத்தா காலத்தில், இதிலிருந்துதான் குடிக்க தண்ணீர் எடுப்பாா்களாம். ஆனால் தற்போது, இதை மோந்து பாா்த்தாலேகூட குமட்டி கொண்டுவருகிறது.''

இதனால், சில நேரங்களில் பைப்பை திறந்தால், தண்ணீர் மிகவும் வித்தியாசமான நிறத்தில் வருகிறது'' என்றனா். தமிழகத்தில் மதுரையில்தான் அதிக அளவு டெங்கு நோயால் மக்கள் பாதிக்கபடுகின்றனர். சராசரியாக 650-க்கும் மேற்பட்ட டெங்கு பாதித்த மக்கள் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபடுகின்றனா். அரசு மருத்துவமனைக்கு சிறிது தூரம் தள்ளித்தான் இந்த பந்தல்குடி ஓடையும் உள்ளது.தற்போதுகூட, மதுரை மாநகராட்சி கமிஷனர் 'அனீஷ் சேகர்' சுகாதரமில்லாத நிலையில் பராமரிக்கபட்டு டெங்கு பரவுவதற்குக் காரணமாக இருக்கும் வீடுகளுக்கும், வணிகவளாகங்கள்,மருத்துவமனைகள் ஆகியவற்றிக்கு அபராதம் விதிக்கப்படும் என்றாா். மக்கள் தவறு செய்தால் அபராதம் விதிக்கிறார்கள். ஆனால், அரசே இவ்வளவு பொிய சுகாதரச் சீா்கேடு நிகழ்வதை காணாமல் இருக்கிறதே... இதற்கு என்ன தீா்வு?

க்ளீன் இந்தியா எனக் குரல் கொடுப்பவர்கள், இங்கு வந்து பார்க்கட்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் நடவடிக்கை எடுத்து இப்பகுதி மக்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்பார்களா?