வெளியிடப்பட்ட நேரம்: 15:01 (28/11/2017)

கடைசி தொடர்பு:16:22 (28/11/2017)

'ஃபைலுடன் வந்த நவநீதகிருஷ்ணன்...   பதறிப்போன பழனிசாமி'- தினகரன் ஆதரவு எம்.பி-க்கள் மனம் மாறிய கதை #VikatanExclusive

நவநீதகிருஷ்ணன்,  எடப்பாடி பழனிசாமி

தினகரனை ஆதரித்த எம்.பி.க்கள் நவநீதகிருஷ்ணன், விஜிலா, கோகுலகிருஷ்ணன் ஆகியோர் திடீரென முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தது தினகரன் தரப்பினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சந்திப்பு முதல்வர், துணை முதல்வர் தரப்பைச் சேர்ந்தவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு கல்லெறியப்பட்ட கண்ணாடிபோலானது அ.தி.மு.க. கட்சியில் அடுத்தடுத்து அணிகள் உதயமாகியதால் தொண்டர்கள் குழப்பமடைந்தனர். உள்கட்சி பூசலால் அ.தி.மு.க.வில் சின்னம், கட்சி ஆகியவை முடக்கப்பட்டன. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் மனம் மாறினர். அணிகள் இணைந்த பிறகு இரட்டை இலைச் சின்னம் கிடைத்த உற்சாகத்துடன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகின்றனர் பழனிசாமி, பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான கட்சியின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள் ஆர்.கே.நகர் வேட்பாளர் தேர்வில் மும்முரமாக ஈடுபட்டுவருகின்றனர். அவைத் தலைவர் மதுசூதனனுக்கே மீண்டும் வாய்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதற்கிடையில் கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. கட்சியினரை ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி, செங்கோட்டையன் ஆகியோர் சமரசப்படுத்தினர். அதன்பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் தினகரனை ஆதரித்த எம்.பி-க்கள் நவநீதகிருஷ்ணன், விஜிலா, கோகுலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.  அப்போது, நவநீதகிருஷ்ணன் கையில் ஒரு ஃபைல் வைத்திருந்தார். அது, குடிநீர் மற்றும் வடிகால் திட்டம் தொடர்பான கோப்பு என்று சொல்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். திட்டம் குறித்து விரிவாகப் பேசியபிறகு மூன்று பேரும் புறப்பட்டுச்சென்றுள்ளனர். 

 இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர், "ஆளுங்கட்சியினருக்கு எதிராகச் செயல்பட்டதாக தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். அந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்துவருகிறது. இரட்டை இலைச் சின்னம் விவகாரத்தில் தினகரனுக்கு ஆதரவாக நவநீதகிருஷ்ணன், விஜிலா மற்றும் சிலர் டெல்லி வரை சென்றனர். தினகரனின் ஆதரவு எம்.பி-க்கள் மீதும் கட்சித்தாவும் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. இந்தச் சமயத்தில் இரட்டை இலைச் சின்னம் எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் அணிக்கு ஒதுக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இது, தினகரன் ஆதரவாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியது.

 ஆட்சியும் கட்சியும் சசிகலா குடும்பத்தினரைவிட்டு பறிபோனதால் அங்குள்ளவர்கள் மனம் மாறத் தொடங்கிவிட்டனர். அதன்தொடர்ச்சியாகவே மூன்று எம்.பி-க்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துள்ளனர். அப்போது, நவநீதகிருஷ்ணன் எம்.பி, ஃபைலுடன் வந்திருந்தார். அந்த ஃபைல் குறித்து ஆலோசனை  நடந்தது. ஃபைலுடன் நவநீதகிருஷ்ணன் வந்ததைப் பார்த்ததும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பதறிப்போய்விட்டனர். அதன்பிறகு அவர்கள் மூன்றுபேரும் கிளம்பிச் சென்றுவிட்டனர். தினகரனை ஆதரித்தவர்கள் விரைவில் இங்கு வந்துவிடுவார்கள். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்குள் தினகரனின் கூடாரம் காலியாகிவிடும்" என்றார்.

இதுகுறித்து நவநீதகிருஷ்ணன் எம்.பி-யிடம் கேட்டதற்கு, "நான் எந்த அணியிலும் இல்லை. பொதுவாகத்தான் இருந்தேன். இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக தனியாகத்தான் தேர்தல் ஆணையத்திடம் அஃபிடவிட்டைத் தாக்கல் செய்திருந்தேன். இரட்டை இலைச் சின்னம் எங்கு இருக்கிறதோ, அங்கு நான் இருப்பேன் என்று சொல்லியிருந்தேன். முதல்வரை வாரந்தோறும் சந்தித்துவருகிறேன். ஒரத்தநாடு தாலுகாவில் நான் தத்தெடுத்த பருத்திக்கோட்டை கிராம வளர்ச்சிக்காக முதல்வரை நேற்று சந்தித்தேன். அந்தக் கிராமத்தில், வடிகால்வாய்த் திட்டம்குறித்து ஆலோசித்தேன். விஜிலா எம்.பி-யும் வளர்ச்சித் திட்டம் குறித்துதான் பேசினார். என்னைப் பொறுத்தவரை அ.தி.மு.க. ஒற்றுமையாக இருக்க வேண்டும். சமீபகாலமாக தினகரனுடன் பேசுவதில்லை. அவரிடம் சொல்லிவிட்டுதான் நாங்கள் முதல்வரைச் சந்தித்ததாக தினகரன் சொல்லியிருப்பது அவருடைய கருத்து" என்றார். 


டிரெண்டிங் @ விகடன்