அடையாறு ஆற்றில் செத்து மிதந்த ஆயிரக்கணக்கான மீன்கள்!

சென்னை அடையாறு ஆற்றின் கரையோரத்தில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன. இதைப் பார்த்த அந்தப் பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

சென்னையில் அண்மையில் பெய்த வடகிழக்குப் பருவமழையால் அடையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மழை நீர் சேமிக்கப்படாததால் ஒரு டி.எம்.சி நீரை கடலில் வீணாகக் கலந்துவிட்டதாகப் புகார் எழுந்தது. சென்னை தற்போது சகஜ நிலைக்குத் திரும்பியுள்ள நிலையில், பட்டினப்பாக்கம், பெசன்ட் நகர் உள்ளிட்ட அடையாற்று கரையோரப் பகுதியில் இன்று காலை ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்து கிடந்தன. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள், உடனடியாக மீன்வளத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அதிகாரிகள், இந்த இடத்தை ஆய்வு செய்தனர்.

மீன்கள் ஒரே நேரத்தில் செத்து மிதக்க என்ன காரணம் என்றும் நீரில் விஷத்தன்மை கலந்துவிட்டதா என்றும் விஷமிகள் யாரேனும் தண்ணீரில் விஷத்தைக் கலந்துவிட்டனரா என்ற கோணத்திலும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, செத்துக்கிடக்கும் மீன்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும் மீன்கள் இறந்ததுக்கு என்ன காரணம் என்றும் கண்டறிய வேண்டும் எனவும் அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதனிடையே, "இனப்பெருக்கம் செய்வதற்காகக் கடலிலிருந்து கழிமுகம் பகுதிக்கு வரும் மீன்கள் ஆற்றுநீரிலுள்ள வேதிப்பொருள்கள் கழிவுகளால் போதி ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழந்திருக்கலாம்" என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!