வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (28/11/2017)

கடைசி தொடர்பு:13:58 (28/11/2017)

ஆர்.கே.நகரைக் கை கழுவுகிறாரா தினகரன்?!  - கலக்கம், குழப்பம்

தினகரன்

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. 'குடும்ப உறவுகளின் எதிர்ப்பை அடுத்து, போட்டியிடுவதுகுறித்து ஆலோசித்து வருகிறார் தினகரன். அவருக்குப் பதிலாக கட்சி நிர்வாகிகளில் ஒருவரைப் போட்டியிட வைக்கும் வேலைகள் நடந்துவருகின்றன' என்கின்றனர் சசிகலா உறவுகள். 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மீண்டும் தொப்பி சின்னத்தில் களம் இறங்கத் தயாராகி வருகிறார் டி.டி.வி.தினகரன். ' தனிப்பட்ட செல்வாக்கை நிலைநிறுத்துவதற்கு போட்டியிடுவதே சிறந்தது' என்பது அவரது பார்வையாக இருக்கிறது. ஆனால், ' தினகரன் போட்டியிடக் கூடாது' என குடும்ப உறுப்பினர்கள் சிலர் வலியுறுத்தியதாகத் தகவல் வெளியானது. பரப்பன அக்ரஹாரா சிறையில் தன்னை சந்திக்க வந்த குடும்ப உறுப்பினர்களிடம் பேசிய சசிகலா, ' களத்தில் நாம் இரட்டை இலையை எதிர்த்து நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இது நமக்குத்தான் ஆபத்தாக முடியும். இத்தனை ஆண்டுகாலம் எதற்காக நாம் பாடுபட்டோமோ, அதற்கு எதிராக நிற்பது சரியல்ல. தினகரன் களத்தில் நிற்பதையும் சிலர் விரும்பவில்லை. இதுவரையில் மிடாஸில் இருந்து மதுபானத்தைக் கொள்முதல் செய்த டாஸ்மாக் நிறுவனம், உடனடியாக நிறுத்திக்கொண்டது. இதேபோல், குடும்பத்தினர் நடத்தும் பிற தொழில்களுக்கும் சிக்கல் வரலாம். உள்ளாட்சித் தேர்தல் என்றால் களத்தில் போட்டியிட்டு பலத்தைக் காட்டலாம். இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோற்றுவிட்டால், நமக்குத்தான் நஷ்டம். குடும்பத்துக்கு மூத்தவர்களிடம் கலந்து ஆலோசித்து முடிவெடுங்கள்' எனப் பேசியதாகவும் குடும்ப உறவுகள் தெரிவித்தனர். 

இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் ஆதரவாளர் ஒருவரைக் களமிறக்கும் வேலைகள் நடந்துவருகின்றன. "வடசென்னைப் பகுதியைச் சேர்ந்த காளிதாஸ் என்பவரை களமிறக்கத் திட்டமிட்டுள்ளனர்" என விவரித்த சசிகலா உறவினர் ஒருவர், "இடைத்தேர்தலில் மீண்டும் தினகரன் களமிறங்கலாம் என்பதை உணர்ந்துதான், வருமான வரித்துறை சோதனை தீவிரமடைந்தது. சசிகலா உறவுகளிடம் கைப்பற்றப்பட்ட பணத்தை வைத்தே வளையத்தை இறுக்கும் முடிவில் இருக்கிறது வருமான வரித்துறை. இதை சசிகலாவின் கவனத்துக்கும் சிலர் கொண்டு சென்றுள்ளனர். 'களத்தில் இருந்து தினகரன் விலகியாக வேண்டும்' என்பதில் மத்தியில் உள்ளவர்கள் உறுதியாக உள்ளனர். எனவே, 'போட்டியிட வேண்டாம்' எனத் தகவல் சொல்லி அனுப்பினார் சசிகலா. அவரது வார்த்தைகளுக்கு தினகரன் செவிமடுப்பாரா என்பதெல்லாம் போகப் போகத் தெரியும்" என்றார் விரிவாக.