வெளியிடப்பட்ட நேரம்: 13:59 (28/11/2017)

கடைசி தொடர்பு:15:21 (28/11/2017)

''பீரியட்ஸ் நேரம்... பாத்ரூமை பூட்டிட்டாங்க'' - போராட்டத்திலிருக்கும் செவிலியர்களின் வேதனை

சென்னை, தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட செவிலியர்கள் இரண்டாவது நாளாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். 

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 32 மாவட்டங்களைச் சேர்ந்த செவிலியர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மீடியாக்களை உள்ளே அனுமதிக்க காவல்துறை மறுத்துவருகிறது. எனவே, எனது ஐ.டி கார்டை கழட்டிவிட்டு, போராட்டத்துக்காக உள்ளே சென்றுகொண்டிருந்த சென்னை செவிலியர்களுடன் கலந்து உள்ளே நுழைந்தேன். மழையினால் தண்ணீர் தேங்கியிருந்த பிளாக்கைக் கடந்து, செவிலியர்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த இடத்தை அடைந்தேன். 

செவிலியர்

ஏராளமான நர்ஸ்கள் கைக்குழந்தையோடும், அவர்களின் குடும்பத்தோடும் போராட்டக்களத்தில் இருந்தனர். சில கர்ப்பிணிப் பெண்களும் போராடிக்கொண்டிருந்தனர். அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் என ஒவ்வொருவரும் சாப்பாடு பண்டல்களை வாங்கிவந்து போராட்டத்தில் இருந்தவர்களுக்கு வழங்கிக்கொண்டிருந்தார்கள். தங்கள் குழந்தைகளைத் தொட்டில் கட்டித் தூங்கவைத்துவிட்டு, 'அறவழியில் எங்களது போராட்டத்தை நிறைவேற்றுவோம்' என முழக்கமிட்டுக் கொண்டிருந்தவர்களோடு பேசத் தொடங்கினேன். 

''எனக்கு சொந்த ஊர் மதுரை. திருச்சியில் போஸ்ட்டிங் போட்டாங்க. ரெண்டு வருஷமா நர்ஸா வேலை பார்க்கிறேன். முறையான சம்பளமும் நிரந்தர பணியிடமும் கிடைக்கலை. பலரின் உயிரைக் காப்பாத்தும் நாங்க, இன்னைக்கு எங்க உயிரைப் பொருட்படுத்தாமல் போராடிட்டிருக்கோம். ஆனா, இந்த போலீஸ்காரங்க கொஞ்சம்கூட இரக்கமே இல்லாமல் ரொம்ப மோசமா நடந்துக்கிறாங்க'' என வேதனையோடு தெரிவித்தார். 

செவிலியர்கள் போராட்டம்

''நாங்க எல்லாருமே ஒவ்வொரு மாவட்டத்திலிருந்து, வாட்ஸ்அப் வழியே பேசி திரண்டு வந்திருக்கோம். எங்க போராட்டம் வெற்றிபெறாமல் இந்த இடத்திலிருந்து நகர மாட்டோம். கர்ப்பிணி செவிலியர்களும் களத்தில் போராடிட்டு இருக்காங்க. கைக்குழந்தைகள் பசியால் அழுகும்போது பெத்த மனசு துடிக்குது. என்ன பண்றது? எங்களுக்கு அரசிடமிருந்து நல்ல பதில் வரணும்'' எனத் தனது ஆதங்கத்தைப் பதிவுசெய்தார் நாகர்கோவிலைச் சேர்ந்த மற்றொரு செவிலியர். 

"போராட்டத்தில் ஈடுபடணும்னு முடிவுப் பண்ணினதும் என் குடும்பத்தோடு கிளம்பி வந்துட்டேன். என் குழந்தையைத் தொட்டிலில் தூங்கவெச்சிருக்கேன்.  வெயில், மழையைப் பொருட்படுத்தாமல் போராடிட்டிருக்கோம். நேத்து நைட்டு பாத்ரூமை பூட்டிட்டாங்க. ஆம்பளைங்க திறந்தவெளியில் போயிடலாம். நாங்க என்ன செய்வோம்? இங்கே தொண்ணூற்று ஐந்து சதவிகிதம் பொண்ணுங்கதான் இருக்கோம். பாத்ரூமை பூட்டி எங்களை கஷ்டப்படுத்தறாங்க. நாங்க எங்களுக்கு கிடைக்கவேண்டிய நியாயத்துக்குதானே போராடுறோம். அதுக்கு ஏன் இப்படி சித்ரவதை பண்றாங்க. நாங்க என்ன வன்முறையிலா ஈடுபட்டோம். சட்டரீதியா எங்க கோரிக்கைகளை முன்வைத்து அமைதியாகப் போராடறோம்'' எனக் கொதித்தார், தூத்துக்குடியைச் சேர்ந்த ஸ்டாப் நர்ஸ் யுவஶ்ரீ

செவிலியர்கள் போராட்டம்

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆறுமாத கர்ப்பிணி பேசும்போது, ''போராட்டத்துக்குப் போறேனு சொன்னதும் வீட்டுல தடுத்தாங்க. அவங்களை மீறியே வந்திருக்கேன். இது எங்களுக்கான போராட்டம். அதில் எனக்கும் பங்கு உண்டே. மீடியாக்காரங்க யாரையுமே உள்ள விடலை. அவங்க வந்தா எங்களுக்கு ஆதரவு பெருகிடும்னு நினைக்கிறாங்க. நேத்து முழுக்க பாத்ரூம் போகாததால் வயிறு ரொம்ப வலிக்குது. இங்கே உள்ள நர்ஸ்கள் எல்லோரும் சேர்ந்து மொபைல் டாய்லெட் வரவெச்சோம். அதையும் போலீஸ்காரங்க உள்ள அனுமதிக்கலை. காலையில் ரொம்ப சண்டை போட்டதுக்கு அப்புறம்தான் ஒரே ஒரு டாய்லெட்டை திறந்துவிட்டாங்க. எங்களை எவ்வளவு துன்புறுத்தினாலும் கோரிக்கையை நிறைவேறாமல் நகரவே மாட்டோம்'' என்றார். 

சேலத்தைச் சேர்ந்த நர்ஸ் ஒருவர், ''எனக்கு இப்போ பீரியட்ஸ். வெள்ளை டிரஸ் வேற போட்டுருக்கேன். நிறைய ரத்தப்போக்கு ஏற்படும். இரவு நேரத்தில் நாப்கின் மாத்துவேன். நேத்து பாத்ரூமை பூட்டிட்டதால் என்ன பண்றதுனே தெரியலை. டிரஸ்ல கறை பட்டுறக் கூடாதுனு பின்னாடி பார்த்துட்டே இருந்தேன். காலையில் பாத்ரூமை திறந்துவிட்டதும், முதல் ஆளா உள்ளே ஓடினேன். இந்த அளவுக்கு எங்களை கஷ்டப்படுத்தி எதைச் சாதிக்கறாங்க. எங்களுக்கு நியாயம் கிடைக்காமல் போராட்டத்தைக் கைவிட மாட்டோம்'' என்றார். 

செவிலியர்கள் போராட்டம்

பலரும் அந்த மைதானத்திலேயே படுத்திருந்தார்கள். சிலர், குடும்பத்தோடு அமர்ந்து குழந்தையைத் தூங்கவைக்கிறார்கள். அவர்களை மொபைலில் படம் பிடித்தபோது, ஒரு பெண் போலீஸ் வந்துவிட்டார். 'நான் ஸ்டாப் நர்ஸ்தான்' என்றதும், ஐடி கார்டை காட்டும்படி கூறினார். அப்போது, போராட்டத்தில் இருந்த பெண்கள், 'போராட வரும்போது ஐ.டி கார்டு எல்லாமா கொண்டுவருவாங்க. எங்களுடன்தான் மேடம் வேலை பார்க்கிறாங்க' எனச் சொன்னதும் அவர் சென்றுவிட்டார். (சில காரணங்களுக்காக செவிலியர்களின் பெயர் மற்றும் ஊரின் பெயரை மாற்றி எழுதியுள்ளேன்)

பிறகு அந்த நர்ஸ்களின் பாதுகாப்புடனே மைதானத்திலிருந்து வெளியேறினேன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க