வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (28/11/2017)

கடைசி தொடர்பு:14:30 (28/11/2017)

'சுனாமி அல்ல; வதந்தி!' - மாவட்ட ஆட்சியர் விளக்கம்

நாகையில், சுனாமி எச்சரிக்கை எதுவும் கொடுக்கப்படவில்லை என்றும், சுனாமிகுறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் எச்சரித்துள்ளார்.  

தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியின் காரணமாக, தமிழகக் கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.  கடல் அலைகளின் சீற்றம் கடுமையாக இருப்பதால், நாகை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.  இதனால், சுமார் ஒரு லட்சம் மீனவர்கள் வருமானமின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.  

இந்நிலையில், கடந்த நவம்பர் 24-ம் தேதி, சுனாமி போன்ற இயற்கைப் பேரிடர் வந்தால், அதை எதிர்கொள்வது எப்படி? என்ற ஒத்திகை நிகழ்ச்சி நாகை அருகே விழுந்தமாவடி மீனவ கிராமத்தில் நிகழ்த்தப்பட்டது.  அப்போது, காரில் ஒலிபெருக்கிமூலம் சுனாமி தாக்கும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், கடலோரப் பகுதியில் நடமாட வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.  அந்தக் காட்சியை வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பரப்பிவருகிறார்கள். அதில், வேளாங்கண்ணியில் கடல் உள்வாங்கிவிட்டதாகவும், சுனாமி தாக்கும் அபாயம் இருப்பதாகவும் வதந்தியைப் பரவவிடுவதால், கடலோர மக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டது.  

இந்த வதந்தியால், கடலோர மக்களிடையே எழுந்த அச்சம் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்குத் தெரிவிக்கப்பட்டது.  இதையடுத்து, நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் பேட்டியளித்தார், 'கடந்த 24-ம் தேதி பேரிடர் ஒத்திகையின்போது எடுக்கப்பட்ட வீடியோவை பொதுமக்கள் யாரும் நம்பவேண்டாம். சுனாமி எச்சரிக்கை எதுவும் கொடுக்கப்படவில்லை. சுனாமிகுறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று எச்சரித்தார்.  அதன்பிறகே, பதற்றம் மெள்ளத் தணிந்துவருகிறது.  

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க