வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (28/11/2017)

கடைசி தொடர்பு:15:00 (28/11/2017)

’ரகுவைக் கொன்றது யார்?’ - வாசகம் எழுதிய இளைஞர்களிடம் போலீஸ் விசாரணை!

ரகுவைக் கொன்றது யார் என்று சாலையில் வாசகம் எழுதிய இளைஞர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

ரகுவைக் கொன்றது யார்

கோவையில், வருகின்ற டிசம்பர் 3-ம் தேதி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, வ.உ.சி பூங்கா முதல், விமான நிலையம் வரை தொடர்ச்சியாக கட் அவுட், பேனர்கள் மற்றும் அலங்கார வளைவுகள் வைக்கப்பட்டுள்ளன. இதனிடையே, ரங்கசாமி கவுண்டன் புதூரைச் சேர்ந்த கந்தசாமி என்பவரின் மகன் ரகுபதி. அமெரிக்காவில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார். திருமண பேச்சுவார்த்தைக்காக கோவை வந்தவர், பழனி கோயில் செல்வதற்காக கடந்த சில நாள்களுக்கு முன்பு நள்ளிரவு, பைக்கில் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக அனுமதியின்றி வைக்கப்பட்ட, அலங்கார வளைவு மோதி, ரகு கீழே விழுந்தார். அவர் எழுவதற்குள், எதிரே வேகமாக வந்த டிப்பர் லாரி ஒன்று மோதி சம்பவ இடத்திலேயே ரகு பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது மரணம் தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை எழுப்பியது. குறிப்பாக, அவர் உயிரிழந்த இடத்திலேயே, Who Killed Ragu (ரகுவைக் கொன்றது யார்) என எழுதப்பட்டது. இது சமூகவலைதளங்களில் வைரலாக பரவவே, நேற்று முன்தினம் இந்த வாசகம் அழிக்கப்பட்டது. மேலும், சம்பவம் நடைபெற்ற இடத்தில் போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டது.

இந்நிலையில், சாலையில் Who Killed Ragu என எழுதிய இரண்டு பேரிடம், கோவை பீளமேடு போலீஸார் விசாரணை நடத்தினர். அதன்படி, பீளமேடு பகுதியைச் சேர்ந்த வருண் 26 மற்றும் பிரசாந்த் 27, ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது. விசாரணையின்போது, ரகு உயிரிழந்த ஆதங்கத்தில் இப்படி செய்துவிட்டதாக அவர்கள் கூறியுள்ளனர்.

இதையடுத்து, அவர்கள் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் மீது வழக்கு ஏதும் பதியப்படவில்லை.