வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (28/11/2017)

கடைசி தொடர்பு:16:14 (27/06/2018)

அணி மாறும் அறந்தாங்கி அ.தி.மு.க எம்.எல்.ஏ-வின் அட்ராசிட்டி

அறந்தாங்கி எம்.எல்.ஏ., ரத்தின சபாபதி, 'அங்கிட்டு இங்கிட்டு' என்கிற விதமாக, அ.தி.மு.க-வின் இரண்டு அணிகளிலும் சமய சந்தர்ப்பத்துக்கு ஏற்றார்ப்போல, தன் ஆதரவு என்ற நிலையைக்காட்டிவந்தார். ஆறு மாதங்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி ஆதரவாளராகக் காட்டிக்கொண்டார். அதன்பிறகு அப்படியே யூ டர்ன் அடித்து, தினகரனின் தீவிர ஆதரவாளராக கலர் பூசிக்கொண்டார். இப்போது, இரட்டை இலை எடப்பாடி அணிக்குக் கிடைத்தைத் தொடர்ந்து, மீண்டும் அவர் அணிக்குத் தாவும் முடிவில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இவர், இரண்டு தினங்களுக்கு முன்னர்தான் புதுக்கோட்டை புத்தகக் கண்காட்சியில், 'இரட்டைஇலையை முடக்கும்படி  கேட்டவர்களிடமே, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் சின்னத்தைக் கொடுத்திருக்கிறது" என்றும் "விரைவிலேயே இரண்டு அணிகளும் ஒன்று சேர்ந்துவிடும்" என்று அட்ராசிட்டியைக் கிளப்பினார். இப்போது, எடப்பாடி பழனிசாமி அணிக்குத்தாவப்போகிறார் என்ற பேச்சு அறந்தாங்கி தொகுதி முழுக்க கேட்க ஆரம்பித்துவிட்டது. இதற்கு, வலுவான காரணங்களாக இரண்டு விஷயங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று, எடப்பாடி ஆட்சியையும் கட்சியையும் முழுக்க தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டார். இரண்டாவதாக, இரட்டை இலை சின்னமும் அவர் கைவசம் போய்விட்டது. ''ஆயிரம் காரணகாரியங்களை அடுக்கினாலும் இன்றைய தேதிக்கு வலுவான அணியாக, எடப்பாடி அவதாரம் எடுத்து இருப்பதை எவரும் மறுத்துவிட முடியாது. எனவே, அந்த அணிக்குப் போவதுதான் புத்திசாலித்தனமான காரியம் என்பதை ரத்தின சபாபதி உணர்ந்திருக்கிறார். ஆகவே, அவர் அணி தாவுவது இயல்பான விசயம்தான்" என்கின்றனர் அ.தி.மு.க-வினரே.

இதை மறுக்கிறார்கள் ரத்தின சபாபதியின் ஆதரவாளர்கள். அவர்கள் சொல்லும் காரணங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். "அண்ணன் சபாபதி, தினகரன் குடும்ப வகையறாவில் சம்பந்தம் போட்டிருப்பவர். அந்த வகையில், தினகரனுக்கு சம்பந்தி முறை வேண்டும். அத்துடன், சபாபதியின் தம்பி பரணி கார்த்திகேயன் மன்னார்குடி திவாகரனின் தீவிர ஆதரவாளர். நிலைமை இப்படி இருக்கும்போது, எம்.எல்.ஏ எப்படி எடப்பாடி அணிக்குப் போவார்?" என்று சபாபதியின் ஆதரவாளர்கள் கேட்கிறார்கள். ஆனாலும் அறந்தாங்கி  மக்கள், "நெருப்பு இல்லாமல் புகையுமா?"என்றும் கேட்கிறார்கள்.