'தமிழ்நாட்டைப் பீடித்த சாபக்கேடு'- முதல்வருக்கு எதிராகச் சீறிய முன்னாள் எம்.எல்.ஏ.

'விவசாயிகளின் தற்கொலைக்கு அரசாங்கத்தின் பொறுப்பின்மையே காரணம்' குற்றம் சாட்டும் முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன் குற்றம் சாட்டினார்.

புதுக்கோட்டை நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில், இன்று விவசாயிகள் சங்கத்தின் மாநில குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ-வும் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவருமான குணசேகரன், தமிழக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடினார். "தமிழ்நாட்டில், ஏற்கெனவே உள்ள  50 மணல் குவாரிகள்மூலம் ஆற்று மணலை அள்ளி எடுத்து, வளத்தைச் சுரண்டிவிட்டார்கள். மேலும், 70 மணல் குவாரிகளைத் திறக்க அனுமதி அளித்திருப்பது, தமிழ்நாட்டை பாலைவனமாக்கும். தவிர, எடப்பாடி பழனிசாமி தனக்கு வேண்டியவர்களுக்கு அந்த மணல் குவாரிகளைக் கொடுக்க இருப்பதாகவும் தகவல் வருகிறது. ஆற்றுப் பாசனத்தை நம்பி நமது விவசாயிகள் செய்துவரும் விவசாயம் இதனால் பெரிதும் பாதிக்கப்படும். முதல்வரின் பொறுப்பற்ற இதுபோன்ற முடிவுகள்தான் விவசாயிகள் தற்கொலைசெய்துக்கொள்ளக் காரணமாக இருக்கிறது.

ஒரு மாநிலத்தின் முதல்வர், விவசாயிகள் நலனுக்கு எதிராகத் தொடர்ந்து ஈடுபடுவதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்க்கிறது. காவிரி நீர் விஷயத்திலும் நாம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறோம். அதற்கான முயற்சிகளில் இப்போதைய முதல்வர் இறங்கியதாகவே தெரியவில்லை. இன்னும் சொல்லப்போனால், மக்களைப் பற்றியும் விவசாயிகள் பற்றியும்  கொஞ்சமும் அக்கறை இல்லாத அரசாங்கமாகத்தான் தற்போதைய அரசு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இது, தமிழ்நாட்டைப் பீடித்த சாபக்கேடு" என்றார்.  இந்தக் கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாவட்டப் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!