வெளியிடப்பட்ட நேரம்: 17:10 (28/11/2017)

கடைசி தொடர்பு:17:10 (28/11/2017)

' சரியான நேரத்துக்கு அரசு டாக்டர்கள் வந்துவிடுகிறார்கள்'- பெரியகுளம் அரசு மருத்துவமனை நோயாளிகள் குஷி

தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு காலையில் சென்றால், கால்கடுக்கக் காத்திருந்துதான் மருத்துவர்களைச் சந்திக்க வேண்டும். புற நோயாளிகள் பிரிவில் சரியான நேரத்துக்கு மருத்துவர்கள் வருவதில்லை என்ற குற்றச்சாட்டு, காலம் காலமாக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அவலம்.

இது தொடர்பாக, பெரியகுளம் அரசு மருத்துவமனையின் கண்காணிப்பாளர் (பொறுப்பு) டாக்டர் குமாரை தொடர்புகொண்டுபேசியபோது, ``மருத்துவர்கள் பற்றாக்குறைதான் அடிப்படையான காரணம். இனி அந்தப் பிரச்னை இல்லை. கூடுதலாக மூன்று மருத்துவர்களை காலை நேரத்துக்கு வரவழைத்திருக்கிறோம். இதனால் புற நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் அவசியம் ஏற்படாது. விரைவாக மருத்துவரை சந்தித்துவிட்டு மருந்துகள் வாங்கிச்செல்லலாம். மருத்துவர்கள், பயோமெட்ரிக் முறையில் தங்கள் வருகையைப் பதிவு செய்துவந்தார்கள். சமீபத்தில் அந்த மெஷின் பழுதானது. தற்போது அந்தப் பழுது சரிசெய்யப்பட்டு, மீண்டும் பயோமெட்ரிக் முறை அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது''  என்றார்.

மருத்துவரை சந்திக்கக் காத்திருந்த மக்களிடம் பேசியபோது, ''மருத்துவமனைக்கு வந்தாலே நீண்ட நேரமகாகும் என யாருமே வர மாட்டார்கள். மருத்துவரைப் பார்க்க 11 மணி வரைகூட காத்திருப்போம். தற்போது எல்லாம் மாறிவிட்டது. நேரத்துக்கு மருத்துவர்கள் வருகிறார்கள். விரைவாக மருத்துவர்களைச் சந்திக்க முடிகிறது'' என்றனர் மகிழ்ச்சியோடு. தற்போது எல்லாம் சரியாகிவிட்டாலும், மீண்டும் பழைய கதைக்கு மருத்துவமனை செல்லாது, செல்லவும் அதிகாரிகள் விட மாட்டார்கள் என்றே நம்புவோம்.