வெளியிடப்பட்ட நேரம்: 18:13 (28/11/2017)

கடைசி தொடர்பு:18:42 (28/11/2017)

அச்சுறுத்தும் பாம்பன் நுழைவு வாயில் சோதனைச் சாவடி கட்டடங்கள்! உயிர் பயத்தில் காவலர்கள்

சேதம் அடைந்த நிலையில் உள்ள பாம்பன் காவல் சோதனை சாவடி

தீவிரவாதிகள், சமூக விரோதிகள் போன்றவர்களின் ஊடுருவலைத் தடுப்பதன்மூலம், நாட்டு மக்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களை அச்சுறுத்தும் நிலையில் உள்ளது, பாம்பன் சோதனைச்சாவடி கட்டடம்.

இலங்கையில், விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே மோதல் நடந்துவந்த நிலையில், ராமேஸ்வரம் தீவு வழியாக புலிகளுக்கு உதவும் நடவடிக்கைகள் நடந்துவந்தன. ராஜீவ் காந்தியின் மரணத்தைத் தொடர்ந்து இந்த உதவிகள் நிறுத்தப்பட்டன. இதனால், புலிகள் இயக்கத்தினருக்கு தமிழகக் கடலோரப் பகுதி வழியாக மறைமுகமாக உதவும் நடவடிக்கைகள் தொடங்கின. இதைக் கட்டுப்படுத்தவும் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஊடுருவல் செய்வதைத் தடுக்கவும், ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகள் முழுவதும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டன. ராமநாதபுரம், தனுஷ்கோடி, ஓலைக்குடா, பாம்பன், தொண்டி, எஸ்.பி.பட்டினம், திருப்புல்லாணி, சாயல்குடி போன்ற கடலோரப் பகுதிகள் முழுவதும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுவந்தது.

இந்நிலையில் விடுதலைப்புலிகள் இயக்கம் முற்றிலும் அழிக்கப்பட்ட நிலையில், இந்தக் காவல் சோதனைச் சாவடிகள் கடத்தல், சமூக விரோதிகள் மற்றும் உள்நாட்டுத் தீவிரவாதிகளின் ஊடுருவல் ஆகியவற்றைத் தடுப்பதற்காகப் பயன்பட்டுவருகின்றன. இரவு பகல் என 24 மணி நேரமும் இங்கு கண்காணிப்பில் ஈடுபடும் காவலர்கள், தமிழ்நாடு கடலோரப் பாதுகாப்புக் குழுமத்தின் கட்டுப்பாட்டில் உள்ளனர். மழை, வெயில், காற்று என எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு, நாட்டு மக்களின் பாதுகாப்புக்காகத் துப்பாக்கி ஏந்தி நிற்கும் காவலர்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இடிந்து விழும் நிலையில் உள்ள பாம்பன் காவல் சோதனை சாவடி
 

பாம்பன் பாலத்தின் நுழைவு வாயிலில், காவல் சோதனைச்சாவடி ஒன்று உள்ளது. சுமார் 15 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட இந்தச் சோதனைச்சாவடியின் உட்புறம் சேதமடைந்து, கான்கிரீட் கம்பிகள் வெளியே வந்து எப்போது இடிந்துவிழுமோ என்ற அபாய நிலையில் உள்ளது. இங்கு, 5 காவலர்கள் எப்போதும் பணியில் உள்ள நிலையில் துப்பாக்கிகள், தகவல் தொடர்புச் சாதனங்கள் என எல்லா சாதனங்களும் மழையில் நனையும் நிலையில் இருந்துவருகிறது. கட்டடத்தின் உட்புறம் மிகவும் சேதமடைந்து இருப்பதால், அதனுள் நின்று காவலில் ஈடுபட முடியாத நிலையில் காவலர்கள் வெயிலிலும் மழையிலும் நனைந்தபடியே பணிசெய்து வருகின்றனர். நிழலுக்காகப் போடப்பட்டுள்ள ஆஸ்பெட்டாஸ் கூரையும் இப்ப விழுமோ எப்ப விழுமோ என்ற நிலையிலேயே உள்ளது. முக்கிய வி.ஐ.பி களின் பாதுகாப்புக்காக நவீன வாகனம் முதல், பாதுகாப்புச் சாதனங்கள் வரை பல கோடி ரூபாய் செலவில் கொள்முதல் செய்யும் காவல்துறை அதிகாரிகள், மக்களின் பாதுகாப்புக்காக மழை, வெயில் எனப் பார்க்காமல் காவல் காக்கும் காவலர்களுக்கு உருப்படியான கட்டடங்களை அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.