அ.தி.மு.க-வில் தொடரும் குழப்பம்! ஆர்.கே.நகர் களேபரம்!

ஆர்.கே.நகர் - அ.தி.மு.க. ஆலோசனை

மிழகம் முழுவதும் ஒட்டுமொத்த பொதுமக்களும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கக் கூடிய தொகுதியாக மாறிவிட்டது சென்னை ஆர்.கே.நகர். தமிழக அரசியலில் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவாகவும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவு அமையக்கூடும் என்று இப்போதே அந்தத் தொகுதி மக்கள் பேசிக்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

ஆர்.கே.நகர் தொகுதியில் 2016 தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் முதல்வரான ஜெயலலிதா, கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே, கடந்த ஏப்ரல் மாதம் ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, பணப்பட்டுவாடா புகாரால் ஒத்திவைக்கப்பட்டது தனிக்கதை.

'தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரன்' என்ற பழமொழிக்கேற்ப, அ.தி.மு.க-வில், தற்போது தலைமையின் கட்டுப்பாடின்றி 'எல்லோருமே தலைவர்கள்தான்' என்ற ரீதியில் அந்தக் கட்சியின் செயல்பாடு அமைந்துள்ளது. 'எடப்பாடி அணியுடன், ஓ.பன்னீர்செல்வம் அணி இணைந்து, இரட்டை இலைச் சின்னம், கட்சியின் பெயர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணிக்குதான் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ள போதிலும், ஆர்.கே.நகர் தொகுதிக்கான வேட்பாளரை அறிவிப்பதில் அ.தி.மு.க-வில் இழுபறி நீடிக்கிறது. 

"அ.தி.மு.க. அணிகள் இணைந்தாலும், மனங்கள் இணையவில்லை" என்று ஓ.பி.எஸ். ஆதரவாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வி.மைத்ரேயன், அண்மையில் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து பரபரப்பை அதிகப்படுத்தினார். அவர் கூறிய கருத்தில் உண்மை இருக்கிறதா, இல்லையா என்பதற்கு அப்பாற்பட்டு, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களை மாவட்ட அளவிலும், நகர அளவிலும் எடப்பாடி அணியினர் தொடர்ந்து புறக்கணிப்பதாகவே சொல்லப்படுகிறது. சில இடங்களில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களின்போது, இந்த வேறுபாட்டைக் கண்கூடாகவே காண முடிந்தது. 

ஆர்.கே.நகர்

ஆர்.கே.நகர் வேட்பாளர் குறித்து முடிவெடுப்பதற்காக கட்சியின் தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை அன்று நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் ஓ.பி.எஸ். ஆதரவாளர்களுக்கும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும் இடையே சிறிது சலசலப்பு ஏற்பட்டது. எந்தச் சலசலப்பும் இல்லை என்ற நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி ஆகியோர் மறுத்தபோதிலும், ஆர்.கே.நகர் வேட்பாளராக இ.மதுசூதனனை நிறுத்துவதில், இந்தக் கூட்டத்தில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை என்றே தெரிகிறது. மேலும், அ.தி.மு.க. ஆட்சிமன்றக் குழுவில் தற்போதுள்ள ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன், தமிழ்மகன் உசேன், ஜஸ்டின் செல்வராஜ், வேணுகோபால் எம்.பி, ஆகியோருடன் புதிய உறுப்பினர்களாக கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், வளர்மதி மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

எனவே, எடப்பாடியின் ஒப்புதல் இல்லாமல் எந்தமுடிவையும் ஓ.பி.எஸ்ஸோ, அவரின் ஆதரவாளர்களோ எடுத்துவிடக் கூடாது என்பதில் முதல்வர் தெளிவாக உள்ளதையே இந்த நடவடிக்கை காட்டுகிறது என்கின்றனர் அரசியல்நோக்கர்கள். அந்தவகையில் ஆர்.கே.நகர் வேட்பாளராக மதுசூதனனை நிறுத்துவதற்கும் நிர்வாகிகளில் ஒருதரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் கடந்த ஏப்ரலில் நடைபெறுவதாக இருந்த இடைத்தேர்தலில் மதுசூதனன் நிறுத்தப்பட்டிருந்தார். தற்போது அவருக்குப் பதில் வேறுநபரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அதன்காரணமாகவே, ஆர்.கே.நகர் தொகுதியில் வேட்பாளர் யார் என்பதை, நவம்பர் 29-ம் தேதி அன்று அ.தி.மு.க. ஆட்சிமன்றக் குழு விவாதித்து முடிவெடுக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அணிகள் இணைப்புக்குப் பிறகும் அ.தி.மு.க-வில் குழப்பம் நீடிக்கவே செய்கிறது.

தினகரன் - சசிகலாஆர்.கே.நகர் தொடர்பாக, ஒன்றிணைந்த அ.தி.மு.க-வில்தான், இந்த நிலையென்றால், தினகரன் தரப்பிலோ குழப்பத்தின் தீவிரம் வேறுவகையில் உள்ளது. ஆர்.கே.நகர் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தபோது, வெளியூரில் சுற்றுப்பயணத்தில் இருந்த டி.டி.வி. தினகரன், 'ஆர்.கே.நகரில் நான் போட்டியிடுவேன். அ.தி.மு.க-வுக்கும் எனக்கும்தான் போட்டி' என்றார். தனியார் தொலைக்காட்சி பேட்டியிலும், தான் போட்டியிடப்போவதாக தினகரன் கூறினார். ஆனால், தினகரன் ஆதரவாளரான தங்க தமிழ்ச்செல்வன் கூறுகையில், "ஆர்.கே.நகர் தொகுதியில் தினகரன் போட்டியிடுவது குறித்து, கட்சியின் பொதுச்செயலாளரும், ஆட்சிமன்றக் குழுவும் ஆலோசனை நடத்தி அறிவிக்கப்படும்" என்றார். மேலும் தினகரன் மீண்டும் அளித்த ஒரு பேட்டியில், "பெங்களூரு சென்று சசிகலாவைச் சந்தித்த பின்னர், நான் போட்டியிடுவது பற்றி முடிவு செய்யப்படும்" என்று குறிப்பிட்டார். 

தவிர, 'இரட்டை இலைச் சின்னம், கட்சியின் பெயரை எடப்பாடி பழனிசாமி அணி பயன்படுத்தலாம்' என்று தேர்தல் ஆணையம் அறிவித்ததும், இந்த உத்தரவை எதிர்த்து 'உச்ச நீதிமன்றம் செல்வோம்' என்று கூறிய தினகரன், இதுவரை உச்ச நீதிமன்றத்தில் இதுதொடர்பாக மனுத்தாக்கல் செய்யவில்லை. அதன் பின்னணியிலும் என்ன பிரச்னை உள்ளது எனத் தெரியவில்லை என்கிறார்கள் அரசியல்நோக்கர்கள். இந்தமுறை அவர் போட்டியிடுவது உறுதி என்றாலும், ஏன் இவ்வளவு குழப்பத்தில் உள்ளார்? மாற்றிப் மாற்றிப் பேசுவது ஏன்? என்பது புரியாத புதிராகவே உள்ளது.

இந்தச் சூழ்நிலையில், முன்னாள் முதல்வராக இருந்த இப்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் செங்கோட்டையன் போன்றவர்கள், ஜெயலலிதா மறைவுக்குப் பின் நடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில், "கட்சியின் பொதுச்செயலாளர் சின்னம்மா" என்று தெரிவித்த காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவிக்கொண்டிருக்கின்றன. இதனை தினகரன் தரப்பு திட்டமிட்டு பரப்புகின்றதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ் - ஸ்டாலின்தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க மட்டுமே ஆர்.கே.நகர் தொகுதிக்கான வேட்பாளரை அறிவித்துள்ளது. ஏற்கெனவே நிறுத்தப்பட்ட மருது கணேஷ், தி.மு.க. சார்பில் போட்டியிடுகிறார். தி.மு.க-வுக்கு அதன் கூட்டணியான காங்கிரஸ் மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி ஆகியன ஆதரவு தெரிவித்துள்ளன. மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, "தங்கள் நிலைப்பாட்டை மாநிலக்குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தி அறிவிப்போம்" என்று கூறியுள்ளது. ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் தி.மு.க-வுக்கு ஆதரவு அளித்திருப்பது, அக்கட்சிக்கு ஒரு பலமாகவே கருதப்படுகிறது. கடந்தமுறை ஓ.பி.எஸ் அணி, தினகரன் அணியினரை எதிர்த்து, கடும் சவாலை எதிர்நோக்கிய தி.மு.க. வேட்பாளருக்கு இந்தமுறை சற்றே போட்டி குறைந்துள்ளதாகவே தெரிகிறது. எனவே, டிசம்பர் 21-ம் தேதி நடைபெறவிருக்கும் ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் வெற்றிபெற்று ஆர்.கே.நகரை தி.மு.க. கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு இப்போதே எழுந்துள்ளது. இத்தொகுதி காலங்காலமாக அ.தி.மு.க-வின் கோட்டையாகவே இருந்து வந்துள்ளது. அந்த அடிப்படையில், அ.தி.மு.க-வுக்கு வாக்குவங்கி அதிகம் என்றாலும், தினகரன் போட்டியிட்டு வாக்குகளைப் பிரிப்பதால், தி.மு.க-வுக்குச் சாதகமாகக்கூடும் என்றும் தெரிகிறது. எப்படி இருப்பினும் ஆர்.கே.நகர்  இடைத்தேர்தல் முடிவு, எதிர்கால தமிழ்நாட்டு அரசியலில் ஒரு வரலாற்று நிகழ்வாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை...!
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!