வெளியிடப்பட்ட நேரம்: 18:10 (28/11/2017)

கடைசி தொடர்பு:18:10 (28/11/2017)

'மதுரையில் தூய்மையைப் பராமரியுங்கள்' - மாநகராட்சி கமிஷனுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட அனுப்பானடி மற்றும் பனையூர் கால்வாய்களில் பல்வேறு கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதாகச் செய்தி வெளியாகியிருந்தது. அதன் அடிப்படையில் நீதிமன்றம் தாமாக முன் வந்து பொதுநல வழக்காக எடுத்து விசாரித்தது. ஏற்கெனவே வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இரு கால்வாய்களையும் சுத்தப்படுத்தி இன்று புகைப்படங்களுடன் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி நிஷாபானு அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கால்வாய்களைத் தூய்மைபடுத்தும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். கால்வாய்ப் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் உள்ளதால், இயந்திரங்களைக் கொண்டு தூய்மைப்படுத்த இயலவில்லை எனத் தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், மதுரை அனுப்பானடி மற்றும் பனையூர் கால்வாய்ப் பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். தொடர்ந்து குப்பைகளைக் கொட்டுவோருக்கு அதிக அபராதம் விதிக்கவும் 2 கால்வாய்களையும் பராமரிப்பது குறித்த அறிக்கையை ஒவ்வொரு மாதமும் மதுரைக்கிளையில் தாக்கல் செய்யவும் மதுரை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டனர்.

மதுரையின் பழைமையைக் கருத்தில் கொண்டு மதுரை மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புவதாகத் தெரிவித்த தலைமை நீதிபதி, மதுரையின் பாரம்பர்யத்தையும் அழகையும் இங்கிருக்கும் கட்டடக்கலை மற்றும் முப்பரிமாண ஓவியங்கள் உள்ளிட்டவற்றைக் காண ஏராளமான வெளிநாட்டினர் வந்து செல்லும் நிலையில், தூய்மையைப் பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அறிவுறுத்தினார்.