கார்ட்டூனிஸ்ட் பாலா, பத்திரிகையாளர்கள் சங்க நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு!

கார்ட்டூனிஸ்ட் பாலா, சென்னை பத்திரிகையாளர்கள் சங்க நிர்வாகிகள் மீது சென்னை திருவல்லிக்கேணி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

கந்துவட்டிக் கொடுமையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் காசிதர்மம் கிராமத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து என்பவர், குடும்பத்தினருடன் நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை இந்தச் சம்பவம் ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, இணையத்தில் கேலிச்சித்திரம் வரைந்த லைன்ஸ் மீடியா நிறுவனத்தைச் சேர்ந்த கார்ட்டூனிஸ்ட் பாலா, கடந்த 6-ம் தேதி கைதுசெய்யப்பட்டார். நெல்லை போலீஸார், சென்னையில் அவரை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு, நெல்லை மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அவரது கைதைக் கண்டித்து சென்னை பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டத்தின்போது கார்ட்டூனிஸ்ட் பாலா வரைந்த அந்தக் கார்ட்டூனைப் பயன்படுத்தியிருந்தனர். 

 போராட்டத்தின்போது சர்ச்சைக்குரிய கார்ட்டூனைப் பயன்படுத்தியதாகக் கார்ட்டூனிஸ்ட் பாலா மற்றும் சென்னை பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகளான பாரதி தமிழன், அசத்துல்லா ஆகியோர்மீது சென்னை திருவல்லிக்கேணி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சர்ச்சைக்குரிய கார்ட்டூன்களைப் பெரிய பேனர்களாக வைத்து, பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு செய்ததாக முதல் தகவல் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தியபோது, கார்ட்டூனிஸ்ட் பாலா சென்னையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!