வெளியிடப்பட்ட நேரம்: 18:25 (28/11/2017)

கடைசி தொடர்பு:18:25 (28/11/2017)

வீணாகும் கூட்டுக்குடிநீர் திட்டம்! கண்டுகொள்ளாத அதிகாரிகள்

தேனி மாவட்டத்தின் மக்கள் தொகைப் பெருக்கத்தால் அதிகரித்த குடிநீர் தேவையைக் கருத்தில் கொண்டு வைகை அணையிலிருந்து தேனி நகருக்கான கூட்டுக்குடிநீர் திட்டம் தீட்டப்பட்டு தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. 68 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தேனி நகருக்கான தண்ணீர் தற்போது தங்குதடையின்றி சென்றுவருகிறது. இந்நிலையில், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே செல்லும் கூட்டுக்குடிநீர் குழாயில் நேற்று திடீரென உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலையில் வெள்ளமென ஓடியது.

இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள். எந்தப் பலனும் இல்லாததால், குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் கல்லைத் தூக்கி வைத்து தண்ணீர் வருவதை சரிசெய்ய முயற்சி செய்திருக்கிறார்கள். இருந்தபோதும் தண்ணீர் வெளியேறிக்கொண்டே இருப்பதால் அப்பகுதியே தண்ணீர் தேசம்போல காட்சியளிக்கிறது. மாவட்டத்தின் தலைநகருக்குத் தண்ணீர் கொண்டு செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டிருப்பதைச் சற்றும் கவனிக்காத நகராட்சி அதிகாரிகளின் செயலை அப்பகுதி மக்கள் கண்டித்தனர்.

பல கட்ட முயற்சிக்குப் பிறகுதான் தற்போது தேனி நகருக்குத் தண்ணீர் கொடுக்கப்படுகிறது. இந்நிலையில் குழாயில் உடைப்பு ஏற்பட்டிருப்பது கவனிக்கத்தக்க ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. இனியாவது அதிகாரிகள் கவனம் செலுத்துவார்களா?