வெளியிடப்பட்ட நேரம்: 16:45 (28/11/2017)

கடைசி தொடர்பு:16:55 (28/11/2017)

'உடனடியாக எதையும் செய்ய முடியாது!' - விவசாயிகளிடம் `கறார்' காட்டிய முதல்வர்

தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சந்தித்துப் பேசினார் சி.பி.ஐ-யின் கே.பாலகிருஷ்ணன். அப்போது, காவிரி டெல்டா விவசாயத்தைப் பாதுகாக்கும் வகையில் தமிழகத்துக்கு வர வேண்டிய பாக்கி 70 டி.எம்.சி தண்ணீரைக் கர்நாடகத்திடமிருந்து பெற்றுத்தர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தனியார் சர்க்கரை ஆலைகள் தர வேண்டிய பாக்கி 1,600 கோடி ரூபாயைப் பெற்றுத்தர வேண்டும். பயிர் காப்பீடு பிரிமியம் செலுத்துவதற்கு டிசம்பர் 15-ம் தேதி வரை காலநீட்டிப்பு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 10 கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

எடப்பாடி பழனிசாமி


இந்தச் சந்திப்பில் மேலும், என்ன பேசப்பட்டது என்பது குறித்து கே.பாலகிருஷ்ணனிடம் தொடர்புகொண்டு கேட்டோம், ``காவிரியில் இருந்து நமக்கு வர வேண்டிய தண்ணீரைப் பெற்றுத் தர நீதிமன்றம், மத்திய அரசு என்று முடிந்த வழிகளில் முயல வேண்டும். சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு வைத்துள்ள நிலுவைத் தொகையைப் பெற்றுத் தர வேண்டும் போன்ற கோரிக்கைகளை முதல்வரிடத்தில் வலியுறுத்திக் கூறியுள்ளோம். அனைத்துக்கும் நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் தெரிவித்துள்ளார். இப்போது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வர உள்ளதால், உடனடியாக எதையும் செய்ய முடியாது என்றும் சீக்கிரமே நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார். மேலும், மாநிலத்தில் நிலவும் பல்வேறு விவசாயப் பிரச்னைகளுக்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து வேளாண் செயலர் மூலம் விளக்கினார்.

விவசாயிகளுக்கு வங்கிகள் கடன் கொடுத்துவிட்டு, அதை சில நேரங்களில் திருப்பி செலுத்தாதபோது, ஏஜென்சிகளை வைத்து மிரட்டிப் பொருள்களை ஜப்தி செய்கின்றனர். இதை உடனடியாக நிறுத்த வேண்டுமென்பதை முதல்வரிடத்தில் எடுத்துக் கூறினோம். குறிப்பாக இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடும் ஏஜென்சிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும் என்பதை எடுத்துரைத்துள்ளோம்' என்றார் விரிவாக.