வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (28/11/2017)

கடைசி தொடர்பு:18:40 (28/11/2017)

`தண்ணீர் வராமல் முதல்வர் வந்தால் கறுப்புக்கொடி காட்டுவோம்' - கொந்தளிக்கும் எம்.எல்.ஏ

காவிரியில் தண்ணீர் திறந்தும் இன்னும் எங்கள் பகுதிக்குத் தண்ணீர் வரவில்லை. இதனால், எங்கள் பகுதி முழுவதும் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் வாடிக்கொண்டிருக்கின்றன. இன்று தண்ணீர் திறந்துவிடவில்லையென்றால் நாளை முதல்வருக்கு கறுப்புக்கொடி காட்டுவோம் என்றார் தி.மு.க எம்.எல்.ஏ துரை சந்திரசேகர்.

கறுப்புக்கொடிஇதுகுறித்து எம்.எல்.ஏ சந்திரசேகரிடம் பேசினோம், ''கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி தடுப்பணையிலிருந்து பிரிந்துவருகின்ற கட்டளைமேட்டு வாய்க்கால் மூலம் கரூர், திருச்சி, தஞ்சாவூர் மாவட்டத்தில் பலஏக்கர் நிலங்கள் பயன்பெறுகிறது. இந்த ஆற்றிலிருந்து வரும் தண்ணீரை வைத்துத்தான் திருவையாறு, திருக்காட்டுப்பள்ளியில் 4500 ஏக்கர் பாசன பகுதிகள் உள்ளன. இந்த ஆற்றை நம்பித்தான் ஒவ்வொரு வருடமும் விவசாயிகள் விவசாயம் செய்து வருகிறார்கள். அக்டோபர் 11-ம் தேதி தண்ணீர் திறந்துவிட்டார்கள். ஆனால், எங்கள் பகுதிக்கு இன்னும் ஒருசொட்டு தண்ணீர்கூட வரவில்லை. கடந்த மூன்று, நான்கு ஆண்டுகளாகத் தண்ணீர் இல்லாமல் செங்கிப்பட்டி, புதுக்குடி, திருமலைசமுத்திரம் ஆகிய பகுதிகளில் இன்னும் நடவு பணிகள் துவங்கவில்லை. இதனால், அப்பகுதியில் உள்ள விவசாயிகள் எங்கள் பகுதிக்குத் தண்ணீர் திறந்துவிட வேண்டுமென்று கலெக்டரிடம் மனு அளித்தோம். ஆனால், இன்றுவரை தண்ணீர் திறந்துவிடவில்லை. நான் பொதுப்பணித்துறை அதிகாரிகளைச் சந்தித்து எடுத்துச் சொல்லியிருக்கிறேன். ஆனால், கடந்த ஒருவாரமாக எந்த ஏற்பாடும் அரசு அதிகாரிகள் செய்யவில்லை. முதல்வர் வருகைக்காக ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள். தண்ணீர் வரவில்லையென்றால், `முதல்வர் வரும்போது கறுப்புக்கொடி காட்டுவோம். வீடுகள்தோறும் கறுப்புக்கொடி ஏற்றுவோம்' என்று சொன்னோம். இந்நிலையில்தான் முதல்வர் வருவதற்கு முன்பு உங்கள் பகுதி ஆற்றில் தண்ணீர் வரும் என்று உறுதியளித்துள்ளனர் அதிகாரிகள். முதல்வர் வருவதற்கு முன்பு தண்ணீர் வரவில்லையென்றால் கறுப்புக்கொடி பதாகைகள் வைத்து ஆர்ப்பாட்டம் செய்வோம்'' என்றார் ஆவேசத்துடன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க