வெளியிடப்பட்ட நேரம்: 18:24 (28/11/2017)

கடைசி தொடர்பு:18:58 (28/11/2017)

தனி மனிதர் அளித்த கொடை.. நெல்லை ஆற்றுப் பாலத்துக்கு வயது 175

கோடி கோடியாய் செல்வம் குவிந்து கிடந்தாலும், 'இல்லை' என வரக்கூடிய வறியவர்களுக்கு கிள்ளிக் கொடுக்கக் கூட மனம் இல்லாத மனிதர்கள் வாழும் பிரபஞ்சத்தில், பிறரின் நலனுக்காக தனது சம்பாத்தியத்தை எல்லாம் அள்ளிக் கொடுத்து பாலம் கட்டிய மாமனிதர் பற்றித் தெரியுமா?. அரசு கட்ட வேண்டிய பாலத்தை தனது சொந்தப் பணத்தில் கட்டி முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அளித்த கொடையாளரின் பெயரைச் சுமந்தபடி நெல்லையில் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறது, சுலோச்சன முதலியார் பாலம்!
 

சுலோச்சன முதலியார் அளித்த கொடை

 

படகுத் துறையில் படுகொலை!
 
நெல்லை, பாளையங்கோட்டை என்ற இரட்டை நகரங்களைப் பிரிக்கும் தாமிரபரணி ஆற்றின் மீது கட்டப்பட்ட சுலோச்சன முதலியார் பாலம் இரு நகரங்களையும் இணைக்கிறது. தமிழக எல்லைக்குள் உற்பத்தியாகி தமிழக எல்லைக்குள்ளேயே 128 கி.மீ தூரத்துக்குப் பயணித்து மீண்டும் தமிழக எல்லையிலேயே கடலில் கலக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில், அணைகள் எதுவும் கட்டப்படாத காலத்தைப் பற்றிய வரலாறு தெரியுமா?
 
தண்ணீரைத் தேக்கிவைக்க அணைகள் எதுவும் இல்லாத நிலையில், மலையில் பெய்யும் மழைநீர் அனைத்துமே வற்றாத ஜீவநதி என வர்ணிக்கப்படும் தாமிரபரணி ஆற்றின் மூலமாக சமவெளிப் பரப்பை நோக்கி ஓடிவருவது வாடிக்கை. அதனால், ஏப்ரல், மே மாதங்கள் தவிர ஆண்டு முழுவதும் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியிருக்கிறது. நெல்லையிலிருந்து பாளையங்கோட்டைக்குச் செல்ல வேண்டுமானால், நீந்தி மட்டுமே கடக்க முடிந்திருக்கிறது. 
 
வசதி படைத்தவர்கள் பணம் செலுத்தி பரிசல் மூலமாக ஆற்றைக் கடக்கவும் வாய்ப்பு இருந்திருக்கிறது. மற்றவர்கள் நீந்தியே ஆற்றைக் கடக்க வேண்டும் என்பதால் வயதானவர்கள், குழந்தைகள் ஆற்றைக் கடக்கும்போது, வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு உயிர்ப்பலிகளும் நடந்திருக்கின்றன. வணிக நிறுவனங்களைக் கொண்ட நெல்லை டவுனுக்குச்  சென்று வர படகுத்துறை இருந்திருக்கிறது. அங்கு பல மணி நேரம் காத்திருந்து பொருள்களை எடுத்து வர வேண்டிய நிலையும் இருந்திருக்கிறது. 
 
படகில் முதலில் இடம் பிடிக்க லஞ்சம் கொடுக்கப்பட்ட சம்பவங்களும் இருந்ததாகக் குறிப்புகள் உள்ளன. சமூக விரோதிகளால் கொள்ளைச் சம்பவங்களும் நடந்துள்ளன. குழுவாகச் செல்பவர்கள் மொத்தமாக இடம் பிடிப்பது என அடிக்கடி தகராறுகளுக்கும் பஞ்சம் இல்லாமல் இருந்துள்ளது. இதனால் படகுத்துறையில் எப்போதும் குழப்பமும் கலவரமுமாகவே இருந்துள்ளது. 
 

பாலம்

 
தேம்ஸ் நதியும்... தாமிரபரணியும்!
 
 
இந்தப் பிரச்னையைச் சமாளிக்க தாமிரபரணி ஆற்றில் 800 அடி நீளத்துக்குப் பாலம் அமைக்க வலியுறுத்தி அப்போதைய நெல்லை மாவட்ட ஆட்சியராக இருந்த ஆர்.ஈடன், இங்கிலாந்து அரசுக்கு 1836-ல் கடிதம் எழுதியும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில், 1840 மார்ச் 10-ம் தேதி படகுத்துறையில் வெடித்த கலவரத்தில், 5 பேர் கொலையாகியிருக்கிறார்கள். படகுத்துறையில் நடைபெற்ற இந்தக் கொலைச்சம்பவத்தால், மனம் வருந்திய அப்போதைய ஆட்சியரான ஈ.பி.தாம்சன், பாலத்தின் அவசியம் பற்றி அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். 
 
கேப்டன் ஃபேபர், பொறியாளரான டபிள்யூ.ஹெச்.ஹார்ஸ்லே ஆகியோருடன் தாசில்தார் அந்தஸ்துக்கு நிகரான சிரஸ்தார் பொறுப்பில் இருந்த சுலோச்சன முதலியார் ஆகியோர் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்துக்குப் பின்னர் களப்பணியாற்றிய அவர்கள், வரைபடம் தயாரித்தனர். அதன்படி 760 அடி நீளத்துக்கு 21.5 அடி அகலத்தில் 60 அடி விட்டத்தில் 11 ஆர்ச்சுகள் அமைக்கவும் அவற்றைத் தாங்குவதற்கு இரட்டை தூண்கள் அமைக்கவும் வரைபடம் தயாரித்தனர். 
 
லண்டனில் உள்ள தேம்ஸ் நதியில் அமைந்துள்ள வெஸ்ட் மினிஸ்டர் பாலத்தைப் போன்ற தோற்றப் பொலிவுடன் இந்த வரைபடம் இருந்ததால், ஆட்சியர் தாம்சனுக்கு மகிழ்ச்சி. அரை லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. கடிதங்களுக்கு மதிப்பளித்து ஆங்கிலேயே அரசு பணம் ஒதுக்காத நிலையில், மக்களிடம் பணம் வசூலித்து பாலத்தைக் கட்டி முடிக்க முடிவு செய்யப்பட்டது. மக்களிடம் வசூல் செய்ய விரும்பாத சுலோச்சன முதலியார் தனது சொந்தப் பணம் முழுவதையும் கொடுக்க முன்வந்தார். அவரது மனைவி வடிவாம்பாளும் முழுமனதுடன் நகைகளை எல்லாம் எடுத்துக் கொடுத்திருக்கிறார். 
 
 

பாலம்

3 ஆண்டுகளாகக் கட்டப்பட்ட பாலம்!
 
செங்கல்பட்டு அருகேயுள்ள திருமணம் என்கிற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர்தான் சுலோச்சன முதலியார். வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது முன்னோர்கள் ஆங்கிலேயர்களுக்கு மொழி பெயர்ப்பாளர்களாக இருந்தவர்கள். அவரது தந்தை ராமலிங்க முதலியார் காலத்தில் குடும்பம் நெல்லைக்குக் குடிபெயர்ந்திருக்கிறது. கட்டபொம்மன் வழக்கை விசாரித்த பானர்மேனிடம் சுலோச்சன முதலியாரின் தந்தை ராமலிங்க முதலியார் மொழிபெயர்ப்பாளராக இருந்துள்ளார்.
 
சுலோச்சன முதலியார் தனது சொந்தப் பணத்தை தாராளமாகக் கொடுத்ததால், பாலம் கட்டும் பணி தொடங்கியிருக்கிறது. நெல்லைக்கு அருகில் இருந்த கோட்டையிலிருந்து கற்களை எடுத்து வந்து இந்தப் பாலம் கட்டப்பட்டிருக்கிறது. இந்தப் பணியில் 100 கைதிகளை ஈடுபடுத்தி உள்ளது மாவட்ட நிர்வாகம். பொறியாளரான ஹார்ஸ்லே மிக நேர்த்தியாகப் பாலத்தைக் கட்டியிருக்கிறார். 1843-ல் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 
சுண்ணாம்புச் சாந்து, பதநீர், கடுக்காய் கலந்த கலவையுடன் கற்கள், செங்கற்கள் போன்றவற்றைக் கலந்து ஆங்கிலேய தொழில்நுட்பத்துடன் உள்ளூர் மக்களின் உடல் உழைப்புடன் பாலம் கட்டப்பட்டுள்ளது. மூன்று வருடமாக இந்தப் பாலம் கட்டும் பணி நடைபெற்றதாகவும் கோலாகலமாக திறப்பு விழா நடத்தப்பட்டதாகவும் கால்டுவெல் தனது டைரிக்குறிப்புகளில் பதிவிட்டிருக்கிறார். இந்தப் பாலம் கட்டப்பட்டு 175 வருடங்கள் ஆகியும் இப்போதும் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. ஆண்டுதோறும் எழுத்தாளர்களும் சமூக ஆர்வலர்களும் இந்தப் பாலம் திறக்கப்பட்ட நாளான நவம்பர் 28 ஆம் தேதியில் பாலத்தை அளித்த கொடையாளியான சுலோச்சன முதலியாரை நினைவு கூர்ந்து வருகிறார்கள். 
 
அரசு விழாவாக நடத்தப்பட வேண்டும்!
 
நாறும்பூநாதன்தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளரான நாறும்பூநாதன், இந்தப் பாலம் குறித்துப் பேசியபோது, ''தற்போது கட்டப்படுகிற பாலங்கள் நாலைந்து வருடங்களிலேயே உடைந்து விடுகின்றன. ஆனால், இந்தப் பாலம் 175 ஆண்டுகள் ஆன பின்னரும் உறுதியாகவும் நெல்லையின் மிகப்பெரிய அடையாளமாகவும் இருக்கிறது. தனி மனிதரான சுலோச்சன முதலியார் தான் சம்பாதித்த பணத்தை செலவு செய்து பாலம் கட்டியிருக்கிறார். 
 
இப்போதும் அவரது பெயரிலேயே இந்தப் பாலம் இருப்பது மகிழ்ச்சியான விஷயம். மதுரையில் நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஆல்பர்ட் விக்டர் பாலத்தை நம்ம ஆட்கள், ஏ.வி பாலம் என்றே அழைக்கிறார்கள். இந்தப் பாலத்தைக் கட்டிய சுலோச்சன முதலியாரை ஆங்கிலேயே அரசு சிறப்பாக கௌரவித்துள்ளது. திறப்பு விழாவின்போது யானை முன்னே நடந்து செல்ல அதன் பின்னால் மேளதாளம் முழங்க முதல் ஆளாக சுலோச்சன முதலியார் பாலத்தில் நடந்து சென்றுள்ளார். 
 
அத்துடன், பாலம் தொடங்கும் இடத்தின் இருபக்கமும் கோபுரம் கட்டப்பட்டு அதில் கல்வெட்டு பொறிக்கப்பட்டிருந்திருக்கிறது. இந்தப் பாலத்தை இடித்துவிட்டு அகலப்படுத்த முயற்சி நடந்தது. அதற்காக இடித்தபோது இடிக்கவே முடியாத அளவுக்கு உறுதியானதாக இருந்ததால், அருகிலேயேர் மற்றொரு பாலத்தை 1965-ல் கட்டினார்கள். இப்போதும் பாலம் உறுதியானதாக உள்ளது. பாலத்தை அகலப்படுத்தும்போது கோபுரத்தை இடித்து விட்டார்கள். அதிலிருந்த கல்வெட்டையும் எங்கேயோ தூக்கிப் போட்டுவிட்டனர்.
 
தாமிரபரணி ஆற்றில் பாலம் அமைத்துக் கொடுத்த சுலோச்சன முதலியாரின் தியாகத்தையும் கொடையையும் மக்கள் மதிக்க வேண்டும். ஆண்டுதோறும் அரசே விழா நடத்தலாம். இந்த நாளில் நெல்லை மாநகராட்சியாவது பாலத்தில் சீரியல் விளக்குகளைப் போட்டு அழகுபடுத்தலாமே?. எதற்கெல்லாமோ விழா எடுக்கும் தமிழக அரசு, வரும் காலத்திலாவது இந்தப் பாலம் கட்டப்பட்ட தினத்தை அரசு விழாவாக நடத்தினால் நல்லது’’ என்றார் ஆதங்கத்துடன். 
 
இரட்டை நகரங்களை இணைத்தபடி 175 ஆண்டுகள் கடந்தும் கம்பீரம் குலையாமல் வரலாற்றுச் சின்னமாக காட்சியளிக்கும் இந்தப் பாலத்தைக் கடப்பவர்களின் மனதில் என்றென்றும் நிலைத்திருப்பார் சுலோச்சன முதலியார்!

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க