வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (28/11/2017)

கடைசி தொடர்பு:15:24 (25/06/2018)

'எங்கள் ஊர் பஸ் ஸ்டாண்ட் 'அதுக்கு' ஃபேமஸ்' - குமுறும் புதுக்கோட்டைவாசிகள்

"எங்க ஊரு பஸ்ஸ்டாண்டையா படம் புடிக்கிறீங்க. நல்லா புடிங்க. புடிச்சு கண்ணுல ஒத்திக்கங்க, வேற என்ன பண்ண முடியும் ஒங்கலால. நாங்க பொலம்பாத பொலம்பலா... போடாதக் கூச்சலா. ஒண்ணுக்குப் போற ஜனங்க காதுலயும் விழ மாட்டேங்குது. நகராட்சி அதிகாரிகங்க காதும் செவிடாப் போச்சு" நாம் கேமராவை கையில் எடுத்ததுமே புதுக்கோட்டை பஸ் ஸ்டாண்ட் வியாபாரிகள் இப்படி புலம்பித் தள்ளினார்கள்.

புதுக்கோட்டை பேருந்துநிலையத்துக்கென்று தனிப் புகழ் ஒன்று உண்டு. அது 'உச்சா கச்சா' வாசனைதான். இந்தப் பேருந்து நிலையத்துக்கு புதிதாக வந்திறங்கும் பயணிகள், இந்த மூக்கைத் துளைக்கும் நாற்றத்தில் தலைகிறுகிறுத்துப் போய்விடுவார்கள்.
"திருநெல்வேலின்னா அல்வா... தஞ்சாவூருன்னா தலையாட்டி பொம்மை. அது மாதிரி, புதுக்கோட்டைன்னா குடலைப் பிரட்டும் உச்சாநாற்றம் கொண்ட பேருந்து நிலையம்" என்று திண்டுக்கல் லியோனி போன்றவர்களே ஒரு காலத்தில் கலாய்த்த புகழ் வாய்ந்த பேருந்து நிலையம் இது.

''உள்ளே மக்கள் பயன்பாட்டுக்கு ஐந்து சிறுநீர் கழிப்பிடங்களைக் கட்டி வைத்திருக்கிறது நகராட்சி. ஆனாலும், மக்கள் வெளியேதான் போகிறார்கள். இதனால் பெரும் அவதிக்குள்ளாகியிருப்பது நாங்கள்தான். பஸ் ஸ்டாண்டை நாற்றமில்லாத நிலையில் வைத்திருக்க நாங்களும் முயற்சி பண்ணிப் பார்த்துட்டோம். ஒண்ணும் கதைக்காகல. கடையில், 'கும்கி' படத்துல தம்பி ராமையாகிட்ட இன்னொரு தம்பி சொல்ற மாதிரி, இந்த மூத்திர நாத்தம் எங்களுக்குப் பழகிப்போச்சு" என்கின்றனர் இங்கு கடை வைத்திருக்கும் வியாபாரிகள்.

பொது இடங்களில் சிறுநீர் கழிக்கும் பொதுமக்களோ, "சிறுநீர் கழிக்க தனியாகக் கழிப்பிடங்கள் கட்டியிருக்கறதெல்லாம் சரிதான். ஆனால், உள்ளே மனுஷன் நுழையறமாதிரியா இருக்கு. அங்கே போனாலே புதுசா வியாதி வந்துடும்போல. அதான் நாங்க வெளியே போறோம். நகராட்சி தினமும் அந்தக் கழிவறைகளைச் சுத்தம் பண்ணட்டும். அதன் பிறகு உள்ளே போறோம்" என்கின்றனர் பயணிகள்.

இது குறித்து புதுக்கோட்டை நகராட்சி சுகாதார அலுவலர் யாழினியிடம் பேசினோம். "தினமும் மூன்று முறை பேருந்து நிலைய சிறுநீர் கழிப்பிடங்களை எங்கள் ஊழியர்கள் சுத்தம் செய்து வருகின்றனர். ஆனாலும், மக்கள் வெளிப்புறங்களில்தான் போகிறார்கள். இனி அப்படி செய்பவர்களைப் பிடித்து அபராதம் போட இருக்கிறோம். இப்படியான நடவடிக்கை மூலமாகத்தான் அவர்களைக் கட்டுப்படுத்த முடியும்" என்றார். புதுக்கோட்டை பேருந்து நிலையத்தின் இந்தத் தனித்துவமான அடையாளம் மாறினாலே அது ஒரு சாதனைதான்.