வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (28/11/2017)

கடைசி தொடர்பு:20:30 (28/11/2017)

`எங்கள் தொகுதி எம்.எல்.ஏ-வைக் காணவில்லை' - கலெக்டரைப் பதறவைத்த மனு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்த மக்கள் குறைகேட்கும் கூட்டத்தில், 'தொகுதி எம்.எல்.ஏ-வைக் காணவில்லை' என்று மனு கொடுக்க வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. அவரின் பெயர் ராஜிவ்காந்தி. 'தென் இந்திய ஃபார்வார்டு கட்சி'யின் மாநில இணைச் செயலாளராக இருக்கிறார்.

அவரிடம் பேசினோம். ’நான் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள  கோமாபுரத்தில் வசிக்கிறேன். எங்க தொகுதி எம்.எல்.ஏ ஆறுமுகம். அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர். ஊர் பொது பிரச்னைகள் சம்பந்தமா மனுக்கள் கொடுக்க எப்போ எம்.எல்.ஏ ஆபீஸ் போனாலும் அது பூட்டியே கெடக்கு. போன்ல அவருகிட்டே பேசினா, 'ஆபீஸுக்கெல்லாம் நான் வர முடியாது. ஊர் பிரச்னைகளை மனுவா எழுதி, கலெக்டருகிட்ட கொண்டுபோய் குடு'னு சொல்றாரு. அவரை நேர்லயும் பார்க்க முடியலே. போன்லயும் புடிக்க முடியல. அதான் எங்கத் தொகுதி எம்.எல்.ஏ-வைக் காணோம்னு கலெக்டரிடம் மனு கொடுக்க வந்திருக்கேன்’ என்றார்.

மேலும் அவர், ’கந்தர்வக்கோட்டை தொகுதிக்குட்பட்ட கோமாபுரம் உயர்நிலைப் பள்ளிக் கட்டடம் கடந்த 2012-ம் ஆண்டு செப்டம்பர் 20-ம் தேதி இடிந்து விழுந்தது. இந்தக் கட்டடத்துக்கு ரூ.42 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டும், இன்னும் கட்டட வேலை நடைபெறவில்லை. இது சம்பந்தமாக எம்.எல்.ஏ ஆறுமுகத்தைப் பார்க்க நானும் ஒரு வருடமாக முயற்சி செய்தும் முடியவில்லை. 18 எம்.எல்.ஏ-க்களைத் தகுதி நீக்கம் செய்ததுபோல் எங்கள் தொகுதி எம்.எல்.ஏ ஆறுமுகத்தையும் சபாநாயகர் பதவி நீக்கம் செய்ய வேண்டும்" என்று கூறினார் ராஜிவ்காந்தி. இதுகுறித்து விளக்கம் கேட்பதற்காக எம்.எல்.ஏ ஆறுமுகத்தை செல்போனில் தொடர்புகொண்டோம். அவரது போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.