வெளியிடப்பட்ட நேரம்: 19:45 (28/11/2017)

கடைசி தொடர்பு:19:45 (28/11/2017)

தோல்வியில் முடிந்த நெய்வேலி என்.எல்.சி முத்தரப்புப் பேச்சுவார்த்தை!

புதுச்சேரியில் இன்று நெய்வேலி என்.எல்.சி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கத்துடன் நடைபெற்ற முத்தரப்புப் பேச்சுவார்த்தை மீண்டும்  தோல்வியடைந்தது.

என்.எல்.சி

நெய்வேலி என்.எல்.சியில் பணிபுரிந்து வரும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவருக்கும் மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க வேண்டும் என்று ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கத்தினர் கடந்த ஜீலை மாதம் முதல் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து நடந்த பல்வேறுகட்டப் பேச்சு வார்த்தைகள் தொடர் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் இன்று புதுச்சேரியில் உள்ள மத்திய உதவித் தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் உதவித் தொழிலாளர் ஆணையர் கணேசன் தலைமையில்  நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கம், என்.எல்.சி நிர்வாகத் தரப்பில் தலைமைப் பொது மேலாளர் தியாகராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் தொழிலாளர் ஒப்பந்ததாரர்கள் கலந்துகொண்டனர்.

நெய்வேலி

அப்போது மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஊதியம் ரூபாய் 359 மற்றும் ஏற்கெனவே ஒப்பந்தங்கள் மூலம் பெற்ற ஊதிய உயர்வு ரூபாய் 218 இரண்டும் சேர்த்து நாள் ஒன்றுக்கு 577 ரூபாயை ஊதியமாக வழங்க வேண்டும் என்று தொழிற்சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.  ஆனால் தற்போது வழங்கிவரும் 526 ரூபாயை மட்டுமே வழங்க முடியும் என்றும், அதில் மாற்றம் செய்ய முடியாது என்றும் தெரிவித்தது என்.எல்.சி நிர்வாகம். அதனால் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. அதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கப் பொதுச் செயலாளர் வெங்கடேசன், ”மத்திய அரசு அறிவித்த 577 ரூபாயை தர நிர்வாகம் மறுத்ததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அதனால் வரும் சனிக்கிழமை நெய்வேலியில் நடைபெறும்  பேரவை கூட்டத்தில் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்துக்கான தேதி அறிவிக்கப்படும்” என்றார். அதனையடுத்து அடிப்படை ஊதியம், பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம், பஞ்சப்படி உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி தொழிலாளர்களின் அண்ணா தொழிற்சங்கம், தொமுச, சிஐடியு உள்ளிட்ட ஆறு தொழிற்சங்கங்கள் உதவித் தொழிலாளர் ஆணையர் தலைமையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க