வெளியிடப்பட்ட நேரம்: 20:15 (28/11/2017)

கடைசி தொடர்பு:20:15 (28/11/2017)

`விஜயபாஸ்கரின் கருத்து ஏற்கக் கூடியது அல்ல' - செவிலியர்கள் போராட்டம் குறித்து தமிழிசை

சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் 1000-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் இரண்டாவது நாளாக உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு, தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆதரவு தெரிவிக்கும் வகையில், போராடியவர்களை நேரில் சென்று பார்த்தார். அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் போராட்டம் குறித்து தனது கருத்தைக் கூறினார்.

தமிழிசை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட செவிலியர்கள், பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் போராட்டத்தைத் தொடங்கினர். மாநில சுகாதாரத் துறை கடந்த 2012ம் ஆண்டு போட்டித் தேர்வு வாயிலாக 11,000 செவிலியர்களை ஒப்பந்த முறையில் பணியமர்த்தியது. இரண்டு ஆண்டுகளில் பணி நிரந்தரம் செய்துவிடுவதாக அவர்களுக்கு உறுதியளிக்கப்பட்டது. பணியமர்த்தப்பட்ட செவிலியர்களுக்கு மாதச் சம்பளமாக 7000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. சம்பளமும் உயர்த்தப்படவில்லை. இதனால் போராட்டத்தில் குதித்தனர் செவிலியர்கள்.

செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை இதுகுறித்து, `வெளிநாடுகளில் செவிலியர்களின் தேவை அதிகமாக உள்ளது. ஆனால், இங்கு அவர்கள் இப்படி நடத்தப்படுவது ஏற்புடையது அல்ல. பத்திரிகையாளர்களை முடக்கிவிட்டால் போராட்டத்தை முடக்கலாம் என்பது நடக்காது. அதை அரசு புரிந்துகொள்ள வேண்டும். செவிலியர்கள் போராட்டம் குறித்த சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரின் கருத்துகள் ஏற்கக் கூடியது அல்ல' என்று கூறினார்.