'தேனிக்கு ரயில் வரவில்லையென்றால் போராட்டம் தொடரும்'- கூட்டத்தில் கொந்தளித்த முன்னாள் எம்எல்ஏ | If the train does not reach the train, the fight will continue!

வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (28/11/2017)

கடைசி தொடர்பு:21:40 (28/11/2017)

'தேனிக்கு ரயில் வரவில்லையென்றால் போராட்டம் தொடரும்'- கூட்டத்தில் கொந்தளித்த முன்னாள் எம்எல்ஏ

கடந்த 2010 டிசம்பர் 31ம் தேதி மதுரையிலிருந்து போடி வரை இயக்கப்பட்ட ரயில் நிறுத்தப்பட்டது. அகல ரயில்பாதையாக மாற்றப்படும் என்ற திட்டத்தோடு பணிகளும் தொடங்கப்பட்டன. ஆனால், இன்று வரை தேனிக்கு ரயில் வந்தபாடில்லை. கிணற்றில் போட்ட கல்லாகிப் போனது ரயில் தண்டவாளம் அமைக்கும் பணிகள். இந்நிலையில் முதல்கட்டப் பணியாக மதுரை முதல் உசிலம்பட்டி வரையிலான ரயில் வழித்தடப் பணிகளை வரும் மார்ச் 2018 க்குள் முடிப்போம் என்றது ரயில்வே. கூடவே அப்பணிகளுக்காக 70கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டது. ஆனால், அப்பணிகளும் நடைபெறவில்லை.

இந்நிலையில் இன்று பெரியகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லாசர் தலைமையில், தேனியில் கூடிய, போடி−மதுரை, திண்டுக்கல் − லோயர்கேம்ப் அகல ரயில் பாதை திட்ட அமலாக்க குழு ஆலோசனைக் கூட்டத்தில், அகல ரயில் பாதை குறித்து விவாதிக்கப்பட்டது. இறுதியாக, மத்திய மாநில அரசுகள் ரயில் திட்டப் பணிகளில் அக்கறை எடுக்காமல் இருப்பதைக் கண்டித்து, வரும் டிசம்பர் 19ம் தேதி தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது பேசிய முன்னாள் எம்.எல்.ஏ லாசர், "தேனிக்கு ரயில் வரவில்லையென்றால் இனி தொடர்போராட்டம் நடத்துவோம்" என்றார்.

போடி − மதுரை அகல ரயில் பாதை திட்டம் வெறும் பகல் கனவாகவே போய்விடுமோ என்ற அச்சம் தேனி மக்களை எப்போதோ ஆட்கொண்டுவிட்டது. ரயில் பயணம் மக்கள் பயன்பாட்டிற்கு மட்டுமல்லாமல், மலைப்பகுதிகளில் விளையும் பொருள்களை எளிமையாகச் சந்தைப்படுத்த ரயில்கள் பேருதவி புரிந்து வந்தன. இன்று அதிகக் கட்டணத்தில் அப்பொருள்கள் சாலை வழியாகப் பயணிக்க வேண்டியிருக்கிறது. இனியேனும் மத்திய மாநில அரசுகள் இவ்விவகாரத்தில் அக்கறை காட்ட வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பு.


[X] Close

[X] Close