வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (28/11/2017)

கடைசி தொடர்பு:21:00 (28/11/2017)

ஊடக விவாதங்களில் கலந்துகொள்ளப்போவது யார்... - குழு அமைக்கும் அ.தி.மு.க!

நாளிதழ், வானொலி, தொலைக்காட்சி உள்ளிட்ட அனைத்து சமூகத் தொடர்பு ஊடகங்களிலும் அ.தி.மு.க-வினர் பங்குகொள்வது குறித்து ஓர் அறிக்கையை ஆளுங்கட்சி வெளியிட்டுள்ளது. அதில், அ.தி.மு.க சார்பில் ஊடகங்களில் பங்குபெறுவது குறித்து குழு அமைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதிமுக அலுவலகம்

இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், `அ.தி.மு.க சார்பில் ஊடகங்களில் நடத்தப்படும் விவாதங்களில் கலந்துகொண்டு கருத்துகளைத் தெரிவிப்பதற்கென்று ஒரு புதிய குழு வெகு விரைவில் கழகத்தின் சார்பில் அமைக்கப்படவிருக்கிறது. இந்தக் குழுவில் இடம்பெறும் கழக உடன்பிறப்புகள் மட்டுமே ஊடகங்களில் நடைபெறும் விவாதங்களில் கலந்துகொண்டு கழகத்தின் சார்பில் அதிகாரபூர்வ பிரதிநிதியாக ஜெயலலிதா அரசின் சாதனைகளையும் கழகத்தின் நிலைப்பாடுகளையும் கழகம் கூற விரும்பும் கருத்துகளையும் எடுத்துரைப்பார்கள். இந்தக் குழுவின் பெயர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். அதன்பிறகே, ஊடகங்களில் நடைபெறும் விவாதங்களில் கழகத்தின் சார்பாகக் குழுவில் உள்ளவர்கள் கலந்துகொள்வார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.