வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (28/11/2017)

கடைசி தொடர்பு:08:57 (29/11/2017)

காவல்நிலையத்தைக் கண்டு அஞ்சும் போலீஸ்காரர்கள்!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளது தென்கரை. இப்பகுதிக்கு எனப் புதிதாக காவல்நிலையம் ஒன்று சமீபத்தில் கட்டப்பட்டு அதில் குடியேறினார்கள் காவலர்கள். ஆனால், பெரும்பாலும் யாருமே ஸ்டேஷனுக்குச் செல்வதில்லை. என்ன காரணம் எனத் தகவலறிந்த வட்டாரத்தில் விசாரித்தோம்.

"என்ன ஆச்சு... ஏது ஆச்சுனு தெரியல... அந்த போலீஸ் ஸ்டேஷன் எப்போ திறக்கப்பட்டதோ அது முதல் தொடர்ந்து எங்கள் தரப்பில் இழப்பைச் சந்தித்தோம். பல்வேறு காரணங்களில் எங்கள் உடன் பணியாற்றிய மூவரை நாங்கள் இழந்தோம். இது எல்லாமும் அந்த போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்ற பிறகுதான் நடந்தது. இதனால் ஸ்டேஷனுக்குள் செல்லவே எங்களுக்கு பயமாக இருந்தது. பெரும்பாலும் வெளியிலேயே இருப்போம். சிலருக்கு இந்த விஷயத்தில் நம்பிக்கை இல்லை.

இருந்தாலும் எங்கள் உயர் அதிகாரிகள் பலரிடம் இதுகுறித்து சொன்னபோது சிலர் எங்களைக் கிண்டல் செய்தார்கள். சிலர் பயந்து, ஏதாவது குறை இருக்கும், கருப்பனுக்கு நேத்திக்கடன் செலுத்தினால் சரியாகிவிடும் என்று சொன்னார்கள். அவர்கள் சொன்னதால், இன்று எங்கள் குடியிருப்பிற்குள் இருக்கும் ஶ்ரீவீச்சு கருப்பணசாமி கோவிலில் கிடா வெட்டி விருந்து வைத்தோம். இனி எங்களை எந்தக் காத்துக் கருப்பும் அண்டாது என்ற நம்பிக்கையில் தைரியமாக ஸ்டேஷனுக்குப் போவோம்" என்றனர். வேடிக்கையாக இருந்தாலும் இதுதான் இன்று நடந்தது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் இந்தக் கிடா விருந்துக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் வரப்போவதாக நமக்குத் தகவல் கிடைத்தது. ஆனால் அவர் வரவில்லை.