கோடிகளில் புரளும் சிலை கடத்தல் நெட்வொர்க் - அதிரவைக்கும் பின்னணி தகவல்கள்

சிலை கடத்தல், idol smuggling

சுபாஷ் சந்திர கபூர், தீனதயாளன் போன்ற பெயர்களை எல்லாம் எங்கோ கேட்டதுபோல் இருக்கிறதா? ஆம்... போன வருடம் தமிழகத்தையே உலுக்கிய 'சிலை கடத்தல்' விவகாரத்தில் சம்பந்தப்பட்ட 'கடத்தல் மன்னர்'களின் பெயர்கள்தாம் இவை. கடந்த சில நாள்களுக்கு முன்புகூட காரைக்குடியில், மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 பழங்கால சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. சிலை கடத்தல் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இதற்கான காரணங்களின் அடுக்குகள் பல... காவல், ஆராய்ச்சி, தொல்லியல் துறைகளைச் சேர்ந்த சில அதிகாரிகளுக்குத் தெரியாமல், இந்தக் கடத்தல்கள் நடப்பதில்லை என்பது நீண்ட நாள்களாக உள்ள குற்றச்சாட்டு. வெளிநாடுகளில், அங்குள்ள காவல்துறை மற்றும் சுங்கத்துறையினரால், கடத்தல் பொருள் எனக் கைப்பற்றப்பட்ட நம் நாட்டுப் பொருள்கள், மலைபோல குவித்து வைக்கப்பட்டுள்ளன. அமெரிக்க சுங்கத் துறையிடம் மட்டுமே, நம் நாட்டைச் சேர்ந்த, ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலைப் பொருள்கள் குவிந்து கிடக்கின்றன. அவற்றை மீட்டெடுப்பது பற்றி, நம்முடைய அரசின் அக்கறையை சொல்லத்தேவையில்லை.

 

தொய்வு-ஏன்?

சிலை கடத்தல் கும்பல்கள், நவீன தொழில்நுட்ப உதவியோடு பல கோடி ரூபாய் முதலீட்டில், ஆராய்ச்சியாளர் குழு, சட்டக் குழு எனத் திட்டமிட்ட கார்ப்பரேட் கம்பெனி ரீதியில் செயல்படுகின்றன. ஒரு சிறிய  படையை வைத்துக்கொண்டு அந்தக் கும்பல்களை ஒன்றும் செய்ய முடியாது. வெளிநாடுகளில் மட்டும் கிட்டத்தட்ட 3,500-க்கும் மேற்பட்ட பணியாளர்களை நியமித்து, பல்லாயிரக்கணக்கான சிலைகளை மீட்டு வருகின்றனர். ஆனால், இந்தியாவில் குறைந்த எண்ணிக்கையிலேயே அதிகாரிகள் உள்ளனர். அவர்களுக்கும் சட்ட நடைமுறைகளில் பல சிக்கல்கள் இருப்பதால், சிலை மீட்பில் அவர்களால் துரிதமாகச் செயல்படவும் முடியவில்லை.

இந்தியாவிலிருந்து குறிப்பாக தமிழகத்திலிருந்து கடத்தப்பட்ட சாமி சிலைகள் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருப்பதைக் கண்டுபிடித்ததில் ‘தி இந்தியா ப்ரைடு புராஜெக்ட் (The India Pride Project)' என்ற அமைப்புக்கு முக்கியப் பங்கு உண்டு.

சிலை கடத்தல், idol smuggling

 

சிலைகளின் மதிப்பு

சிலைகளில் செம்பு, பித்தளை, காரீயம், வெள்ளி, தங்கம் ஆகிய ஐம்பொன்னும் சேர்ந்திருக்கும்.பொதுவாக  85 விழுக்காடு செம்பு, 13 விழுக்காடு பித்தளை, 2 விழுக்காடு காரியம் கலந்து செய்யப்படுவது 'ஐம்பொன் சிலைகள்' ஆகும். கடத்தலின்போது, சிலைகள் எந்தக் காலத்தைச் சேர்ந்தது என்று பொதுவாகக் கணக்கிடப்படுகிறது. எனவே, ஒவ்வொரு வரலாற்றுக்கும் ஒவ்வொரு விலை நிர்ணயிக்கப்படுகிறது.சோழர் மற்றும் பல்லவர் கால சிலைகள் கோடிக்கணக்கில் விற்பனையாகிறது. நம் தமிழகத்தில் பராமரிக்கப்படாத கோவில்களில் உள்ள பஞ்சலோக சிலைகள், ஐம்பொன் மற்றும் கலைநயம் மிக்க சிலைகள் கோடிக்கணக்கிலான ரூபாய் மதிப்பில், கள்ளச் சந்தைகளில் விற்கப்படுகின்றன. இதுவரை சுபாஷ் சந்திர கபூர் மற்றும் அவரது கூட்டாளிகளிடமிருந்து 2,500-க்கும் மேற்பட்ட சிலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன் மதிப்பு சுமார் 800 கோடி ரூபாயாகும்.

தமிழகத்தில் இதுவரை நடராஜர் சிலைகளே அதிகளவில் திருடப்பட்டுள்ளன. இந்த உலகம் ஐம்பூதங்களால் ஆனது என்று  நடராஜர் சிலை உணர்த்துகிறது. அதுமட்டுமல்லாமல், சிவனுடைய சிலை வைத்திருப்பது பெருமை என்று நம்பப்படுவதால், இதனை அதிகளவு விலை கொடுத்தும் வாங்கத் தயாராக இருக்கின்றனர். சிலைகள் மட்டுமல்லாமல், செப்பேடுகள், மரச் சாமான்கள், ஒளி விளக்குகள், இறைவன் எழுந்தருளும் வாகனம், பட்டயம் போன்ற இன்ன பிற பொருள்களும் கடத்தப்படுகின்றன. ஐம்பொன் சிலைகளை விட கற்சிலைகள் விலை மதிப்பற்றதாகும். எனவேதான் உடைந்துபோன சிலைகளையும் திருடுகிறார்கள்.

சிலை கடத்தல், idol smuggling

அதிர்ச்சியளிக்கும் புள்ளிவிவரம்

இந்தியாவில் சுமார்  70 லட்சம் சிலைகள் உள்ளன. இதில் சுமார் 13 லட்சம் பொருள்களுக்கு மட்டுமே முறையான ஆவணப் பதிவு உள்ளது. 2010 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மட்டுமே இந்தியாவுக்குச் சொந்தமான சிலைகள் உள்ளிட்ட 4,408 கலைப்பொருள்கள் கடத்தப்பட்டுள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கை சொல்கிறது. தமிழகத்தில் உள்ள 37,000 கோவில்களில் கிட்டத்தட்ட 4.3 லட்சத்துக்கும் மேற்பட்ட சிலைகள் உள்ளன என்று இந்து அறநிலையத் துறை விவரம் கூறியுள்ளது. இதில் கணக்கிடப்படாத சிலைகள் இன்னும் ஏராளம்.

எப்படிக் கடத்தப்படுகிறது?

தஞ்சாவூர், மதுரை மற்றும் நெல்லையைச் சார்ந்த பகுதிகளில்தான் பெரும்பாலும் சிலைகள் கடத்தப்படுகின்றன. இவ்வாறு கடத்தப்படும் சிலைகள் தனியார் கூரியர் சர்வீஸ் மூலம் சென்னை கொண்டு செல்லப்படுகிறது. பின்னர் அங்கிருந்து, கடல் மார்க்கமாக திருவனந்தபுரம், மும்பை போன்ற இடங்களுக்குக் கொண்டுசெல்லப்படுகிறது. அங்கே இந்தச் சிலைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு லண்டன், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குக் கடத்திச் செல்லப்படுகிறது. சர்வதேச அளவில் சிலை கடத்தலில் ஆண்டுக்கு 45 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் பணம் புரள்கிறது.

சிலை கடத்தல், idol smuggling

பாதுகாப்பு

பாண்டிச்சேரியில் இயங்கும் 'பிரெஞ்சு ஆய்வு நிறுவனம்', 1,35,000-க்கும் மேற்பட்ட சிலைகளின் படங்களை போட்டோ லைப்ரரியாக சேமித்து வைத்துள்ளது. இதுபோலவே அனைத்துக் கோயில்களிலும் உள்ள சிலைகள் மற்றும் சிற்பங்கள் இன்ன பிற பொருள்களையும் ஆவணங்களாக சேமித்து வைக்க வேண்டும்.

தொல்லியல் துறையில் பயிற்சி பெற்ற ஆராய்ச்சியாளர்கள், பணியாளர்கள் போன்றவர்களை நியமிக்க வேண்டும். பணியாளர்கள் சரி வர இல்லாததும் இந்த சிலை கடத்தல் நடைபெறுவதற்கு முக்கியக் காரணமாக இருக்கிறது. நாடு முழுக்க கோயில்களில் உள்ள சிலைகள் மற்றும் புராதனச் சின்னங்களைப் பட்டியலாகத் தயார் செய்தல் வேண்டும். 

மெத்தனப்போக்கு

சிலை கடத்தல் விவகாரத்தில் நமது அலட்சியத்துக்கு முக்கியக் காரணம், புராதனச் சிலைகளின் மதிப்பு நமக்குத் தெரியாததே!  தமிழகத்தில் உள்ள பழங்கால சிலைகளை விற்றாலே ஒட்டு மொத்த இந்தியாவின் கடனையும் அடைத்துவிடலாம். அமெரிக்கா, சிங்கப்பூரிலிருந்து தமிழக சிலைகள் மீட்கப்பட்டன என அன்றாடம் வரும் செய்திகளை நம்மில் எத்தனை பேர் கவனிக்கிறோம்? வெளிநாட்டுக்குக் கடத்தப்பட்ட சிலைகள் தமிழ்நாட்டில், எந்தெந்த பகுதிகளிலிருந்து எடுக்கப்பட்டன... என்பது குறித்த ஒரு பதிவும் நம்மிடம் இல்லை. இந்நிலையில் திருடப்பட்ட சிலைகளை எவ்வாறு மீட்பது?

உலகம் வியக்கும் கலைநயம் மிக்க சிலை மற்றும் சிற்பங்கள் விலை மதிப்பில்லா பொக்கிஷங்கள். நிழல் உலக மனிதர்களே இதனை வர்த்தகப் பொருள்களாக மாற்றுகின்றனர். உலகின் மிகப் பழைமையான குடி 'தமிழ்க் குடி'. அந்தப் பூர்வக் குடியின் வரலாற்றினை நமது அலட்சியத்தால், இழந்துவருகிறோம் என்பதே சிலை கடத்தல் சொல்லும் செய்தி!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!