சசிகலாவுக்கு நெருக்கமானவரின் சர்க்கரை ஆலையில் வருமான வரித்துறை சோதனை!

காஞ்சிபுரம் பகுதியிலுள்ள பத்மாவதி சர்க்கரை ஆலையில் 8 பேர் கொண்ட வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்திவருகிறார்கள்.

சசிகலா வருமான வரித்துறை சொதனை

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள பழையசீவரம் பகுதியில் உள்ளது பத்மாவதி சர்க்கரை ஆலை. சசிகலாவுக்கு நெருக்கமானவர் இந்த ஆலையைத் தொடங்கி எஸ்.வி சுகர்மில் என்ற பெயரில் நடத்திவந்தார். எஸ்.வி சுகர் மில்லிலிருந்து வரும் மொலாசஸ் எனும் மதுபான மூலப்பொருள், படப்பையில் உள்ள சசிகலாவின் உறவினர்கள் நடத்தும் மிடாஸ் மதுபான ஆலைக்கு அனுப்பப்பட்டு வந்தது.  கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு எஸ்.வி. சுகர் மில் தினேஷ் படேல் என்பவருக்கு கைமாற்றப்பட்டது. கடந்த இரண்டு வருடங்களாகச் செயல்படாமல் உள்ளது. 2015-ல் தமிழக அரசின் பரிந்துரை விலையின் அடிப்படையில் நிலுவைத்தொகை இன்னும் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. 1.40 லட்சம் டன் அரவைக்கு, சுமார் 5 கோடி ரூபாய்க்கு மேல் விவசாயிகளுக்கு பாக்கி இருக்கிறது.

இந்தநிலையில், எஸ்.வி. சுகர் மில்லில் 8 பேர் கொண்ட வருமானவரித் துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். மிடாஸ் ஆலைக்குச் சொந்தமான ஆவணங்கள் இதில் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும், இயங்காத ஆலையை இயங்குவதாகக் கணக்குக் காண்பிக்கப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. சென்னையில் உள்ள தினேஷ் படேலின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!