தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகி கொலை வழக்கு: 16 ஆண்டுக்குப் பின் குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுதலை!

தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாநில நிர்வாகி கணேச பாண்டியன் கொலை வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பின் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் இன்று விடுதலை செய்யப்பட்டனர். 

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநிலப் பொதுச் செயலாளராக இருந்த திருவரங்கையைச் சேர்ந்த கணேச பாண்டியன் (45), அவருடன் இருந்த ஆண்டிச்சிகுளத்தைச் சேர்ந்த வெள்ளையன்(49) ஆகிய இருவரையும், ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் கடைவீதியில் 10 பேர் கொண்ட கும்பல் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கடந்த 2001-ம் ஆண்டு கொலை செய்தது. இத தொடர்பாக சிக்கல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து ப.கீரந்தை கிராமத்தைச் சேர்ந்த தர்மலிங்கம், பழனி, பாண்டி, செந்தூர்பாண்டி, கர்ணன், வீரபெருமாள், சக்திவேல், சத்தியமூர்த்தி, சேதுபதி, கோவிந்தராஜ் ஆகியோரை கைதுசெய்தனர்.

கணேசபாண்டியன் கொலை வழக்கில் குற்றவாளிகள் விடுதலை 
 

மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கடந்த 16 ஆண்டுகளாக இந்த வழக்கு நடந்துவந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட சேதுபதி மற்றும் கோவிந்தராஜ் ஆகிய இருவரும் இறந்துவிட்டனர். இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கயல்விழி, அரசு தரப்பில் சாட்சியங்களைச் சரியாகச் சமர்ப்பிக்கவில்லை எனக் கூறி குற்றம்சாட்டப்பட்ட 8 பேரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்து உத்தரவிட்டார். 16 ஆண்டுகளுக்குப் பின் இந்த வழக்குக்கான தீர்ப்பு இன்று வெளியாவதை தொடர்ந்து ராமநாதபுரம் நீதிமன்ற வளாகத்திலும், சிக்கல் பகுதிகளிலும் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!