வெளியிடப்பட்ட நேரம்: 01:03 (29/11/2017)

கடைசி தொடர்பு:08:13 (29/11/2017)

செல்போனில் தலைமைக் காவலருக்குக் கொலைமிரட்டல்! வழக்கறிஞர்மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு

செல்போனில், தலைமைக் காவலர் ஒருவருக்குக் கொலை மிரட்டல் விடுத்த வழக்கறிஞர்மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டு, அவர் கட்சியிலிருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


    

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல் நிலைய தலைமைக் காவலர் ரவி. இவர், இரு தினங்களுக்கு முன் அப்பகுதியில் வாகன தணிக்கை சோதனை நடத்தினார். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த வழக்கறிஞர் பிரபுவின் நண்பர்கள் சிலரை நிறுத்தி வாகன சோதனை நடத்தினார். இதையறிந்த வழக்கறிஞர் பிரபு, தலைமைக் காவலர் ரவியின் செல்போனுக்கு போன் செய்து அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளால் ஆபாசமாக பேசி தலைமைக் காவலர் ரவிக்குக் கொலை மிரட்டல் விடுத்தார். இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதையடுத்து, தலைமைக் காவலர் ரவி கொடுத்த புகாரின் பேரில் வழக்கறிஞர் பிரபுமீது மூன்று பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாண்டையார் ஆதரவாளராக இருந்த வழக்கறிஞர் பிரபு, சமீபத்தில் டி.டி.வி. தினகரன் அணியில் வழக்கறிஞர் அணியில் இணைந்தார். கழகத்தின் கொள்கை, கோட்பாடுகளுக்கு எதிராகச் செயல்பட்டதால் ஒழுங்கு நடவடிக்கை மூலம் அப்பதவியிலிருந்து வழக்கறிஞர் பிரபுவை டி.டி.வி.தினகரன் அதிரடியாக பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். வழக்கறிஞர் என்ற போர்வையில் காவல்துறையில் உள்ள சில உயரதிகாரிகளிடம் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு, அவர்களுக்குக் கீழ் பணிபுரியும் காவலர்களை ஏளனமாகப் பேசுவது இவருடைய வழக்கம் என்று கூறுகிறார்கள்.