வெளியிடப்பட்ட நேரம்: 00:18 (29/11/2017)

கடைசி தொடர்பு:08:18 (29/11/2017)

செவிலியர் போராட்டத்தில் அடுத்தது என்ன? டி.எம்.எஸ் வளாகத்தில் பரபரப்பு!

சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் 2-வது நாளாக நடைபெற்று வந்த செவிலியர்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக ஒருபிரிவினர் அறிவித்துள்ளனர். மற்றொரு பிரிவினர் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளதால்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  


பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தை நேற்று தொடங்கினர். சுகாதாரத்துறை சார்பில் கடந்த 2012-ல் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட 11,000 செவிலியர்கள் இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. இரண்டு ஆண்டுகளில் பணிநிரந்தரம் செய்துவிடுவதாகக் கூறி வேலைக்கு அமர்த்தப்பட்ட செவிலியர்கள், ஐந்து ஆண்டுகள் கடந்தும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை என்று புகார் எழுந்தது. மேலும், ஊதிய உயர்வும் வழங்கப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் இன்று இரண்டாவது நாளாகத் தொடர் போராட்டம் நடத்தினர்.  

இந்தநிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுவரும் செவிலியர்களுடன் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ’செவிலியர்களின் 90 சதவிகித கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளன. அவர்களைப் பணி நிரந்தரம் செய்ய காலஅவகாசம் தேவைப்படும்’ என்றார். அந்த பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கும்போதே, போராட்டம் நடத்தும் செவிலியர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில், ‘ நாளைக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும், அவ்வாறு பணிக்குத் திரும்பாதவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறி விளக்கம் கேட்கப்பட்டது.

போலீஸ்

 

இந்தநிலையில், அமைச்சர் விஜயபாஸ்கர் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து, போராட்டத்தைத் திரும்பப் பெறுவதாக செவிலியர்கள் அறிவித்துள்ளனர். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவுகுறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டவர்கள் வந்து கூறும்வரை தொடர் உள்ளிருப்புப் போராட்டம் தொடரும் என்று டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள செவிலியர்கள் கூறினர்.

இன்று இரவிலும் போராட்டம் தொடர்ந்தது. அந்தப் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு நிலவி வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர் கூறும்போது, “கைக்குழந்தைகளுடன் சிலர் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இங்கு போதுமான கழிவறை வசதிகள் இல்லை. கழிவறைகளை பூட்டிவிட்டனர். திறந்திருந்த ஒரு கழிவறையிலும் தண்ணீர் இல்லை. வெளியே சென்று உள்ளே வர போலீஸார் அனுமதி மறுக்கிறார்கள். என்ன ஆனாலும் எங்கள் போராட்டம் தொடரும்” என்றனர்.