வெளியிடப்பட்ட நேரம்: 03:02 (29/11/2017)

கடைசி தொடர்பு:17:23 (23/07/2018)

பிரபாகரன் பிறந்தநாளை கொண்டாடியவர்கள்மீது நடவடிக்கை: இலங்கை அமைச்சர் பேட்டி

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் பிறந்த நாளை கொண்டாடியவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கொண்டாடப்பட்ட பிரபாகரன் பிறந்தநாள் விழா

தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் 63-வது பிறந்தநாள், அவரின் சொந்த ஊரான யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழர் பகுதிகள் தற்போது ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலும் பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் ஆங்காங்கே மாவீரர்க்கு வீரவணக்கம் செலுத்தியும்  பிரபாகரனுக்கு வாழ்த்துக்கூறியும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. தமிழீழத்தின் வரைபட வடிவைத் தாங்கிய கேக்கைத் தயாரித்த மாணவர்கள், கைலாசபதி அரங்குக்கு வெளியில் அதை வெட்டியும் இனிப்புகளை வழங்கியும் பிரபாகரனின் பிறந்தநாளைக் கொண்டாடினர்.

இந்நிலையில், பிரபாகரனின் பிறந்த தினத்தை கொண்டாடிய நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாகவும், புலனாய்வுத்துறையினர் உதவியுடன் போலீஸார் இதற்கான விசாரணைகளை துவக்கி உள்ளதாகவும் இலங்கை பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் ருவான் விஜயவர்த்தன  கூறியுள்ளார். மேலும், இத்தகைய பிறந்தநாள் கொண்டாட்டங்களால் வடக்கு மாகாணங்களில் வசிக்கும் சாதாரண மக்கள் மத்தியில் மீண்டும் குழப்பங்களை ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.