வெளியிடப்பட்ட நேரம்: 03:30 (29/11/2017)

கடைசி தொடர்பு:17:37 (09/07/2018)

'புதுகை இப்போ உதகை மாதிரி இருக்கு'- குளிரில் சிலிர்க்கும் பள்ளி மாணவிகள்

தொடர்மழையால் புதுக்கோட்டை மாவட்டத்தில் நல்ல சீதோஷ்ண நிலை நிலவுகிறது.

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாகவே, மிதமான வடகிழக்குப் பருவ மழை பரவலாக பெய்துவருகிறது. ஆனால், மாவட்டத் தலைநகரான புதுக்கோட்டையில் மட்டும் மழை', அந்தா.. இந்தா.. எந்தா' என்று, வாடிவாசலில் நின்று போக்குக் காட்டும் ஜல்லிக்கட்டுக் காளையைப் போல 'லந்து'க் காட்டிக்கொண்டு இருக்கிறது.

ஆனாலும், புதுக்கோட்டை நகரமே கடந்த ஒரு வாரமாக ஃபிரீஸரில் வைத்த ஆப்பிள் போல குளிர் மூடிக்கிடக்கிறது. தினமும் பள்ளிச் செல்லும் மாணவிகளை சிறு தூறல் நனைத்து வம்பிழுப்பதும் அவர்கள் தங்களின் செல்லக்குரலில் தூறலைத் திட்டிக்கொண்டே செல்வதும் புதுகை நகரின் புதுக்காட்சிகளாக இருக்கின்றன.

ஆனால், அனுபவம் கொண்ட பெரியவர்களோ, "மழைன்னா பெய்துக் கெடுக்கும் இல்லேன்னா பெய்யாமக் கெடுக்கும். இது ரெண்டும் இல்லாம, இப்படி ரெண்டும் கெட்டானா இருக்குதே. இப்படி இருந்துச்சுன்னா, மக்களுக்கு நோக்காடு வந்து சீக்காளியா விழ வேண்டியதுதான்' என்கிறார்கள். 

இவர்களது கூற்றை மெய்ப்பிக்கும் வகையில், நகரில் உள்ள முக்கிய தனியார் மருத்துவமனைகளில் கூட்டம் அலை மோதுகிறது.
.'எல்லாருக்கும் சீஸன் இருக்கிற மாதிரி, இது டாக்டர்களுக்கான சீஸன். க்ளைமேட் இப்படி இருந்தா, டாக்டர்கள் பிழைப்பு டாப் கியரில் போகும். எங்களுக்கும் டீ வியாபாரம் நடக்கும்" என்கிறார் பிரபல க்ளீனிக் அருகில் கடை வைத்திருக்கும் மாரிமுத்து என்பவர்.

"புதுக்கோட்டை எப்பவுமே இப்படி இருந்தது இல்லே. பக்கத்துல ஆலங்குடி, அறந்தாங்கி, திருமயம், கந்தர்வகோட்டை இங்கெல்லாம் மூன்று நாள்களாக நல்லா மழை பெய்திருக்கு. ஆனா, புதுக்கோட்டை நகரத்தில் மட்டும் ஒரு வாரமாக இப்படித்தான் மப்பும் மந்தாரமுமா இருக்கு. ஏற்கெனவே இந்த ஊர் மக்கள் சுகவாசிகள். இப்போ கேட்கவே வேண்டாம். இஞ்சி டீயைப் போட்டுக் குடிச்சுட்டு, இழுத்துப் போர்த்திக்கிட்டு தூங்கிடுவாங்க" என்கிறார்கள் நகரறிந்த மக்கள்.

இதெல்லாம் ஒரு புறமிருக்க, "நம்ம ஊராடி இது. வெயிலும் இல்லாம.. மழையும் இல்லாம.. குளுகுளுனு ஊட்டி மாதிரி கொடைக்கானல் மாதிரி இருக்கேடி" என்ற பள்ளி மாணவிகளின் இந்த தற்காலிக சந்தோஷம் அளவிட முடியாது.