மோசடி நிதிநிறுவன அதிபர் நிர்மலன் சிறையில் அடைப்பு!

கன்னியாகுமரி மாவட்டம் மத்தம் பாலையில் நிர்மல் கிருஷ்ணா நிதி நிறுவனம் நடத்தி சுமார் 600 கோடி ரூபாய் வரை மோசடி செய்தவர் நிர்மலன். இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நிதிநிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவானார். அதைத்தொடர்ந்து நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த வாடிக்கையாளர்கள் நாகர்கோவில்ல் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் புகார் செய்தனர். சுமார் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் நிர்மல் கிருஷ்ணா நிதி நிறுவனத்தின் மீது வந்தன. நிதி நிறுவன அதிபர் நிர்மலன் உள்பட 18 பேர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நிதி நிறுவனத்தின் இயக்குநர்கள் 4 பேர் கைதுசெய்யப்பட்ட நிலையில், கடந்த 15-ம் தேதி நிர்மலன் மதுரை  முதலீட்டாளர் நல சிறப்பு நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். 

நிர்மலன்

 

அவரை போலீஸார் 10 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணையில் அவரது சொத்து விவரங்கள்குறித்த ஆவணங்களை கண்டுபிடித்தனர். பத்திரப் பதிவுத் துறை அதிகாரிகள் மூலம் நாகா்கோவில் மற்றும் கேரளாவில் இருக்கும் பல சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படுள்ளன. இதுவரை சுமார் ரூ.150 கோடிக்கு மேல் சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதில் முந்திரி தொழிற்சாலைகள், வீடுகள் போன்றவையும் இருக்கின்றன. இந்த சொத்துகள் அனைத்தையும் இறுதிகட்ட ஆய்வுக்காக நாகர்கோவில், தக்கலை ஆர்.டி.ஒ அலுவலகத்துக்கு பொருளாதார குற்றப் பிரிவு போலீஸார் அனுப்பி உள்ளனர். ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது.

இந்த நிலையில், நிதி நிறுவன அதிபர் நிர்மலனின் போலீஸ் காவல் முடிந்து மதுரை நீதிமன்ற பொருளாதார நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நிர்மலன் தன்னை ஜாமீனில் விடுமாறு கூறினார். தன்னை ஜாமீனில் விடும் பட்சத்தில் வாடிக்கையாளர்களுக்கு சொத்துகளை விற்று பணத்தை வழங்க வசதியாக இருக்கும் என்று தெரிவித்தார். ஆனால் நீதிபதி, நிதி நிறுவன அதிபர் நிர்மலனை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து நிர்மலன் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய 13 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை கைதுசெய்து விசாரணை நடவடிக்கை மேற்கொள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் தீவிரமாக தேடிவருகின்றனர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!